தேர்தல் ரத்து: தொலைந்தது 'கெத்து' நோட்டை இறைத்து 'சீட்' வாங்கியோர் அதிர்ச்சி... வாய்ப்பு கிடைக்காதோர்க்கு வானளாவிய மகிழ்ச்சி!

சீனியாரிட்டி, உழைப்பு, விசுவாசம் எதுவுமே இல்லாமல், வெறும் பணத்தைக்கொடுத்து ஆளுங்கட்சியில் 'சீட்' வாங்கி, கவுன்சிலர் கனவில் மிதந்த அனைவருக்கும், 'தேர்தல் ரத்து' என்ற தகவல், பேரதிர்ச்சி தந்துள்ளது; அதே நேரத்தில், வாய்ப்பு கிடைக்காதவர்கள், பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


ஒரு நாள் கூட கால அவகாசமின்றி, கடந்த செப்., 25 அன்று மாலை 6:15 மணிக்கு, உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவித்து, மறுநாள் காலையிலேயே வேட்புமனு தாக்கலைத் துவக்கியது, மாநில தேர்தல் ஆணையம். பெண்களுக்கு, 50 சதவீத ஒதுக்கீடு, எஸ்.சி.,- எஸ்.டி., பிரிவினருக்கான இட ஒதுக்கீடு விவரங்களும், அவசர அவசரமாக இரவு நேரத்தில் வெளியிடப்பட்டன.



உடனே அறிவிப்பு!

கோவை மாநகராட்சியில் உள்ள, 100 வார்டுகளுக்கான வேட்பாளர்களையும் மறுநாளே அறிவித்தது, ஆளுங்கட்சி. தற்போதுள்ள 'சிட்டிங்' கவுன்சிலர்கள், 80 பேரில், 37 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்கு நெருக்கமானவர்களுக்கும், உறவினர்கள் சிலருக்கும் 'சீட்' கொடுக்கப்பட்டது. சிலரிடம், 10 முதல் 30 லட்சம் ரூபாய் வரை வாங்கிக்கொண்டு, 'சீட்' கொடுத்துள்ளதாக, கட்சியினர் குற்றம் சுமத்தினர்.



சமீபத்தில், காங்கிரஸில் இருந்து வந்த லதா திருமுகம், தே.மு.தி.க.,வில் இருந்து வந்த சாவித்திரி, தமிழ்முருகன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியது, கட்சிக்குள் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியது. கட்சிக்கு நீண்ட காலமாக உழைத்து, 'சீட்' கிடைக்காதவர்கள், வேட்பாளர்களை மாற்றக்கோரி, கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, தர்ணாவில் ஈடுபட்டனர்.



எம்.எல்.ஏ.,க்கள் அருண்குமார், அர்ச்சுனன் ஆகியோரை முற்றுகையிட்டு, வாக்குவாதம் செய்தனர். வேட்பாளர் மாற்றப்படுவர் என்று காத்திருந்தனர். கடைசி வரை, வேட்பாளர் யாரும் மாற்றப்படவில்லை.



இதனால், தேர்தல் பணியை புறக்கணிக்க பலரும் திட்டமிட்டு இருந்தனர். இதற்கிடையில், வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள், பிரசாரத்தில் களமிறங்கி, வார்டுக்குள் ஒரு சுற்று வலம் வந்திருந்தனர்.



மூணு லட்சம் காலி!

கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை; அதிருப்தியாளர்களை 'சமாளித்து' பிரசார வியூகம்; 'பிட் நோட்டீஸ்' அச்சடிப்பது, வார்டு அலுவலகம் திறப்பது, தினமும் ஒரு வீதிக்கு சென்று வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவது என, சுறுசுறுப்பாக செயல்பட்டனர். பண பலமுள்ள சில வேட்பாளர்கள், ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை செலவும் செய்து விட்டனர்.

வேட்பு மனு பரிசீலனையில் ஏற்கப்பட்டதால், இனி வேட்பாளர் மாற்றம் இருக்காது என்ற தெம்பில் உற்சாகத்துடன் காணப்பட்டனர். வார்டுக்குள் ஊர்வலமாக சென்று, ஆதரவு திரட்ட திட்டமிட்டு இருந்தனர்.

இந்நிலையில், தேர்தலை ரத்து செய்து நேற்று ஐகோர்ட் உத்தரவிட்டதால், அ.தி.மு.க., வேட்பாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.



பிரசாரத்துக்கு புறப்பட்டவர்கள், ரத்து செய்துவிட்டு, வீட்டுக்குள் முடங்கி விட்டனர். போராடி 'சீட்' பெற்றவர்களும், பெருந்தொகை செலவழித்தவர்களும், அடுத்து என்ன செய்வது எனத்தெரியாமல் விழி பிதுங்கியுள்ளனர்.



மறுபடியும் முதல்ல இருந்தா...!

ஆளுங்கட்சி வேட்பாளர்களில் சிலர் கூறியதாவது:

கோவையில், 100 வார்டுக்கு 800 பேர் விருப்ப மனு செய்திருந்தனர். அதனால், 'சீட்' வாங்குவதற்கே பெருந்தொகை செலவழித்துள்ளோம். அதன் பின், டீ, காபி, உணவு, மைக் செட் செலவு,

கட்சிக்கொடி, வார்டு அலுவலகம் திறப்பது, நோட்டீஸ் அச்சடிப்பது என, பல லட்சம் ரூபாய் காலியாகி விட்டது. எல்லாம் வீணாகி விட்டது. தேர்தலை தள்ளி வைக்கும்போது, மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா எனத் தெரியவில்லை.



வாய்ப்பு கிடைத்தாலும், மீண்டும் ஆரம்பத்தில் இருந்து அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். மொத்தமுள்ள, 100 வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். தற்போது களமிறங்கிய வேட்பாளர்களுக்கு, மீண்டும் வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.



கனவு கலைந்தது

தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கு, 17 வார்டுகள் ஒதுக்கப்பட்டன. வேட்பாளர்களை முன் கூட்டியே அறிவிக்காததால், பிரபு கோஷ்டி, சிதம்பரம் கோஷ்டி, இளங்கோவன் கோஷ்டி என, ஒரே நாளில், 55 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.



இதில், 17 பேருக்கு மட்டும் கட்சி சார்பில் கடிதம் வழங்கப்பட்டது. மற்றவர்கள் மனுக்களை இன்னும் வாபஸ் பெறவில்லை. இவர்களின் கவுன்சிலர் கனவும் கலைந்துள்ளது.



போட்ட காசெல்லாம் போச்சே!

கட்சியில் செல்வமும், செல்வாக்கும் படைத்த சிலர், 'சீட்' வாங்கும் முன்பே, 'டெண்டர்' இல்லாமலேயே, சில இடங்களில், சாலை வசதி, சாக்கடை கால்வாய் கட்டுதல், பாதாள சாக்கடை பணிகளை செய்தனர். குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டும், இரண்டு கோடி ரூபாய்க்கும், ஒட்டு மொத்தமாக ஐந்து கோடி ரூபாய் மதிப்புக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது, 'எல்லாம் போச்சே' என, தலையில் இடி விழுந்த கதையாய், தவிக்கின்றனர்.



உடன் பிறப்புகளும் உறுமல்!

தி.மு.க., தரப்பில் 'சிட்டிங்' கவுன்சிலர்களில் நான்கு பேருக்கும், கவுன்சிலரின் கணவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. உறுதியாக ஜெயிக்கும் வார்டுக்கு வேட்பாளராக அறிவிக்க, கட்சி நிர்வாகிகளில் சிலர் பெருந்தொகையை வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுவரை, 'கரன்சி'யை தண்ணீராய் செலவழித்தவர்கள், தங்கள் கட்சி சார்பிலேயே 'தடை' வாங்கியதால், மவுனமாய் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...