தமிழகத்தில், சொத்து பரிமாற்ற ஆவணங்களை பதிவு செய்ய, 578 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. வழிகாட்டி மதிப்புகள், 2012ல் திருத்தி அமைக்கப்பட்டது முதல் ஆவணங்கள் பதிவு குறைந்ததால், வருவாயும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
ஆண்டுக்கு சராசரியாக, 35 லட்சம் ஆவணங்கள் பதிவாகி வந்த சூழலில், தற்போது, 25 லட்சம் கூட பதிவாகவில்லை என கூறப்படுகிறது. இதனால், பதிவுத் துறையின் வருவாய் இலக்கும் குறைத்து நிர்ணயிக்கப்படுகிறது. இதில், 10 ஆயிரம் கோடி ரூபாயை எட்டுவதே மிகப்பெரிய சவாலாக உள்ளது.நடப்பு நிதி ஆண்டில், முதல் ஆறு மாதங்களில் பதிவான ஆவணங்கள், அதன் வாயிலாக கிடைத்த வருவாய் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
ஆறு மாதங்களில்
இதுகுறித்து, பதிவுத் துறை அதிகாரி ஒருவர்
கூறியதாவது:ஆண்டுக்கு, 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை இலக்கு நிர்ணயிக்கப்படுவது வழக்கம். தற்போது, 10 ஆயிரம் கோடி ரூபாயை இலக்காக நிர்ணயிப்பதே சிக்கலாகி உள்ளது. நடப்பு ஆண்டில், முதல் ஆறு மாதங்களில் குறைந்தது, 5,000 கோடி ரூபாயாவது வருவாய்ஈட்டப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், தற்போதைய நிலவரப்படி, பதிவுத் துறையின் வருவாய், 4,000 கோடி ரூபாய் என்ற அளவிலேயே உள்ளது. மேலும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை காட்டிலும், இது, 35 சதவீதம் குறைவு. வழிகாட்டி மதிப்பு குளறுபடி சரி செய்யப்படாதது, அங்கீகாரமில்லாத மனை விற்பனை தடை போன்றவை இதற்கு காரணங்களாக கருதப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பத்திரம் நிலுவையா?
'சொத்து ஆவணங்களை பதியாமல், நிலுவையில் வைப்பதாக இருந்தால், அது குறித்து, ரசீதில் எழுதி தர வேண்டும்' என, சார் - பதிவாளர்களுக்கு, பதிவுத் துறை தலைவர் செல்வராஜ் உத்தரவிட்டுஉள்ளார்.
தற்போதைய நடைமுறையின்படி, பத்திரப்பதிவு முடிந்தவுடன், அதற்கான ரசீது வழங்கப்படும். பத்திரப்பதிவு நடந்த நாளில் இருந்து, 10 நாட்களில் ஆவணம் கிடைக்கிறது. சில நேரங்களில், பதிவு முடிந்து, 60 நாட்களை கடந்த பின்னும், பத்திரம் கிடைப்பதில்லை. விசாரித்தால், பத்திரம் நிலுவையில் வைக்கப்பட்டு உள்ள விபரம் தெரிய வருகிறது.
இதையடுத்து, பதிவுத் துறை தலைவர், சார் - பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியுள்ளதாவது:பதிவுக்கு வந்த பத்திரத்தை நிலுவையில் வைக்கும் போது, அதற்கான காரணத்தை, பதிவு நாளில் வழங்கப்படும் ரசீதில் குறிப்பிட வேண்டும். அத்துடன் நிலுவை வைக்கவில்லை எனில், எப்போது தரப்படும் என்ற விபரத்தையும் ரசீதில் தெரிவிக்க வேண்டும்.சார் - பதிவாளர்கள், இதன்படி செயல்படுகின்றனரா என்பதை, பதிவுத் துறை துணைத் தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.