தொடரும் சோதனை: மவுனமே சாதனை !

தகவல் தர மறுக்கும் வருமானவரித் துறையினர் பொதுமக்களிடம் பரவுகிறது சந்தேகம், அதிருப்தி.


கோவை நகரில், அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் கறுப்புப் பணம் தொடர்பாக சோதனை மேற்கொள்ளப்பட்டாலும், அவற்றைக் குறித்து எந்தவித தகவல்களையும் வருமான வரித்துறை வெளியிடாமல் இருப்பது, பொது
மக்களிடம் கடும் அதிருப்தியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.



கோவை மாவட்டத்தில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு தொழில் நிறுவனங்களும், லட்சக்கணக்கான வணிக நிறுவனங்களும், 1,800க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், 1,040க்கும் மேற்பட்ட பதிவு செய்த மருத்துவமனைகளும் செயல்படுகின்றன. தமிழகத்தில், சென்னை மண்டலத்துக்கு அடுத்ததாக அதிக வருமான வரி செலுத்தும் பகுதியாக, கோவை மண்டலம் உள்ளது. அதிலும், கோவை நகரத்தின் வளர்ச்சி, பணப்புழக்கம் ஆகியவை, இந்த நகரின் மீது, வருமான வரித்துறைக்கு தனிக்கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.



மேலிருந்து வரும் உத்தரவு:இதற்காகவே, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மண்டல வருமானவரித்துறை கமிஷனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கியுள்ள இந்த அலவலகத்தில், ஒரு முதன்மை கமிஷனர், மூன்று கமிஷனர்கள் உள்பட 400 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். டில்லி தலைமையிடம் அல்லது சென்னை அலுவலகங்களில் இருந்து வரும் உத்தரவுகள் அல்லது தகவல்களின் அடிப்படையில், இங்குள்ள அலுவலர்களால், கோவை நிறுவனங்களில் அவ்வப்போது 'ரெய்டு' நடத்தப்படுவது வழக்கம்.



தமிழக அளவில், கோவையில் நடக்கும் 'ரெய்டு'களில் தான் அதிகளவிலான ரொக்கம், ஆவணங்கள், நகை போன்றவை கைப்பற்றப்படுவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன. ஆனால், இங்குள்ள நிறுவனம் அல்லது வீடுகளில் நடக்கும் எந்தவிதமான சோதனைகள் குறித்தும், எப்போதுமே எந்தத் தகவலும் தெரிவிக்கப்படுவதே இல்லை. இதனால், அனுமானத்தின் அடிப்படையில், அரைகுறை தகவல்களும், ஆதாரமற்ற செய்திகளுமே வெளியில் வருகின்றன.



சோதனைகள் குறித்து, இங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டால், 'மேலிருந்து அறிவிக்கப்படும்; நாங்கள் எதுவும் சொல்லக்கூடாது' என்ற பதிலை மட்டும் மாறாமல் ஒப்புவிக்கின்றனர். ரெய்டு நடக்கும் இடங்களில் எல்லாம் முறைகேடுகள் கண்டறியப்படும் என்பதில்லை. எனினும் வரி ஏய்ப்பு செய்தவர்கள் குறித்த விபரங்களை தெரிவிக்கக் கூட அதிகாரிகள் மறுப்பது ஏன் என்பது தான், மக்களுக்கு காலம் காலமாக புரியாத புதிராக உள்ளது. சமீபமாக, மக்களிடம் அதிருப்தியையும், சந்தேகத்தையும் அதிகரித்து வருகிறது.



அதிலும் குறிப்பாக, 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்புக்குப் பின், கோவையில் 'அங்கே ரெய்டு; இங்கே ரெய்டு' என்றும், 'இத்தனை கோடி பணம் எடுத்தனர்; பழைய நோட்டுக்கள் இவ்வளவு கைப்பற்றினர்' என வதந்திகள் றெக்கை கட்டிப் பறக்கின்றன. இவற்றில், எத்தனை தகவல்கள், எத்தனை சதவீதம் உண்மை என்பது யாருமே அறியாத விஷயமாகவுள்ளது. இது போன்ற சோதனைகள் குறித்து, தகவல்களை வெளியிட வேண்டியது, காலத்தின் கட்டாயமாகவுள்ளது.



விழிப்புணர்வு ஏற்பட வாய்ப்பு



ஏனெனில், இது போன்று வரி ஏய்ப்பு செய்வோரிடமிருந்து எவ்வளவு தொகை, ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது, அதனால், அவருக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து, மக்களுக்குத் தெரியவந்தால் மட்டுமே, வரி ஏய்ப்பு செய்யக்கூடாது என்ற அடிப்படை



விழிப்புணர்வு அல்லது அச்சம் ஏற்படும். கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில், மின்னணு பரிமாற்றங்களை அரசு ஊக்குவிக்கிறது; நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை, நேர்மை ஆகியவற்றை வளர்ப்பதற்கும் இது அவசியமென்றும் கருதுகிறது.

அப்படியிருக்கையில், கறுப்புப் பணத்தை ஒழிக்கும் விதமாக நடத்தப்படும் இத்தகைய 'ரெய்டு'கள் குறித்தும், தெளிவான தகவல்களைத் தருவதற்கு வருமான வரித்துறை முன் வர வேண்டியது அவசியம். இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே, சட்டத்தை மதிக்கும் பொது ஜனங்களின் எதிர்பார்ப்பு. இல்லாதபட்சத்தில், கோவையில் இதுபோன்ற வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனைகள், பொது மக்களிடம் பாராட்டைப் பெறுவதற்குப் பதிலாக, கூடுதல் சந்தேகங்களையும், கேள்விகளையுமே எழுப்பும் என்பதே நிதர்சனம்.





தர முடியாதது, தவிர்க்க முடியாதது!



வருமானவரித்துறை அதிகாரிகள் சிலர் கூறுகையில், 'கோவை அலுவலகத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. துறை சார்ந்து மேற்கொள்ளப்படும் தகவல்கள் பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமை. மீறி செயல்பட்டால் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முதன்மை கமிஷனர் தான் தகவல் தெரிவிக்க வேண்டும். ரெய்டு குறித்து தகவல்கள் கேட்கப்படும் போது எங்களால் தர முடியாதது உண்மைதான். ஆனால், அது தவிர்க்கவே முடியாதது,' என்றனர்.தர முடியாதது, தவிர்க்க முடியாதது!



வருமானவரித்துறை அதிகாரிகள் சிலர் கூறுகையில், 'கோவை அலுவலகத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. துறை சார்ந்து மேற்கொள்ளப்படும் தகவல்கள் பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமை. மீறி செயல்பட்டால் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முதன்மை கமிஷனர் தான் தகவல் தெரிவிக்க வேண்டும். ரெய்டு குறித்து தகவல்கள் கேட்கப்படும் போது எங்களால் தர முடியாதது உண்மைதான். ஆனால், அது தவிர்க்கவே முடியாதது,' என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...