மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான புதிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக மாநிலங்களவையில் நிறைவேறியிருக்கும் புதிய மசோதாவில், மாற்றுத் திறனாளிகளின் வகை 7-லிருந்து 21-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு 3 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகவும், உயர்கல்வியில் 3 சதவீத இட ஒதுக்கீடு 5 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது.
இந்த நடவடிக்கைகள் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கு மேலும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள இந்த மசோதாவைத் தொடர்ந்து, தமிழக அரசும் மாற்றுத் திறனாளிகளுக்கு உயர் கல்வியில் இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாகவும், அரசு வேலை வாய்ப்புகளின் இட ஒதுக்கீட்டை 4 சதவீதமாகவும் உயர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும்.
மேலும், காலியாக உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான அரசுப் பணியிடங்களை விரைந்து நிரப்பவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.