நீதித்துறையின் எதிர்காலம்: உச்சநீதிமன்ற நீதிபதி !!

இந்திய நீதித்துறையின் எதிர்காலம் பெண்கள் கையில் உள்ளது என்று, உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் மற்றும் என்.நடராஜன் அறக்கட்டளை சார்பில் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான 2ஆம் ஆண்டு
மாதிரி நீதிமன்றப் போட்டி நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் பங்கேற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் பேசிய நீதிபதி குரியன், ‘சட்டப் படிப்புக்கென்று தனிச் சிறப்பு இருப்பதால் தற்போது பெருநிறுவனங்கள் தொழில் மேலாண்மை பட்டதாரிகளுக்குப் பதிலாக சட்டம் படித்தவர்களைத்தான் பணியில் அமர்த்துகின்றனர். அதனால் குறுகிய காலத்தில் பொருளீட்ட பெருநிறுவனப் பணிக்குச் செல்வதா அல்லது ஏழை மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தர நீதிமன்றங்களை நோக்கி வருவதா என்பதை சட்ட மாணவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். தற்போது இந்திய அளவில் நீதித்துறையில் 50 சதவிகிதம் பெண்கள் உள்ளனர். உச்சநீதிமன்றத்துக்கு திறமையான, ஆற்றல் மிகுந்த பெண் நீதிபதி பானுமதியை தமிழகம் வழங்கியுள்ளது. அண்மைக்காலமாக, சட்டம் படிப்போரில் 70 சதவிகிதம் பேர் பெண்களாக உள்ளனர். நீதிபதிகளுக்கான போட்டித் தேர்வுகளிலும் அதிகளவில் பெண்கள்தான் வெற்றிபெறுகின்றனர். அடுத்த 15 ஆண்டுகளில் நீதித்துறையில் பெண்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். அதனால் நீதித்துறையின் எதிர்காலம் பெண்கள் கையில் தான் உள்ளது’ என்றார்.

இந்த விழாவில் பங்கேற்ற சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தனது உரையில், ‘இதுபோன்ற மாதிரி போட்டிகளால் தமிழக நீதித்துறைக்கு திறமையான வழக்கறிஞர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. சட்ட மாணவர்கள், ஓய்வு நேரங்களில் நீதிமன்றங்களுக்கு வந்து, வழக்கு விசாரணைகளையும் மூத்த வழக்கறிஞர்களின் வாதங்களையும் கவனித்து, அதன்மூலம் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். வழக்கறிஞர்கள் மேற்கத்திய நாடுகளைப் போன்று வாதங்களை சுருக்கமாக வைக்க வேண்டும். வழக்கறிஞர்கள் தங்கள் திறமையை பெருநிறுவனங்களுக்கு செலவிடுவதற்குப் பதிலாக மக்களுக்காக வாதிட முன்வர வேண்டும். அவ்வாறு செய்வதன்மூலம் வருவாய் இழப்பு ஏற்படுவது போன்று தோன்றலாம். அது நிலையானது அல்ல’ என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...