புதுடில்லி :கடந்த, 2015 - 16ம் ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களில், 76 லட்சம் பேர், ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, பார்லிமென்டில், நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2015 - 16ம் ஆண்டில், 3.7 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில், 99 லட்சம் பேர், ஆண்டுக்கு, 2.5 லட்சம் ரூபாய்க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்களாக உள்ளனர். 1.95 கோடி பேர், ஆண்டுக்கு, 2.5 - 5 லட்சம் ரூபாயும், 52 லட்சம் பேர், ஆண்டுக்கு, 5 - 10 லட்சம் ரூபாயும், 24 லட்சம் பேர், ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாகவும் வருமானம் ஈட்டுவதாக தெரிவித்துள்ளனர்.
ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும், 76 லட்சம் பேரில், 56 லட்சம் பேர் மாதச் சம்பளதாரர்கள். 1.72 லட்சம் பேர் மட்டுமே, ஆண்டுக்கு, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுவதாக தெரிவித்துள்ளனர்.
நாட்டில், 2015ம் ஆண்டில் மட்டும், 1.25 கோடிக்கும் அதிகமான கார்கள் விற்பனையாகியுள்ளன. இரண்டு கோடிக்கும் அதிகமான இந்தியர்கள், தொழில் மற்றும் சுற்றுலா காரணங்களுக்காக, விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு பயணித்துள்ளனர். மாதச் சம்பளம் பெறும், 4.2 கோடி முறைசார் தொழிலாளர்களில், 1.7 கோடி பேர் மட்டுமே, தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர்.
அரசுக்கு சொந்தமான, ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் வளர்ச்சிக்காக, 2016 - 17ல், 1,713 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், 2017 - 18ம் ஆண்டிற்கு, 1,800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.