புரோக்கர்கள்' பிடியில் காரைக்குடி தாலுகா அலுவலகம் சிக்கியுள்ளதால் 'இசேவை' மையம் துவங்கியும் பயனில்லாத நிலையே உள்ளது.அனைத்து சேவைகளும் விரைவில் கிடைக்கும் வகையில் மின் ஆளுமை திட்டம்
செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தாலுகா, நகராட்சி அலுவலங்களில் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் 'இசேவை' மையங்கள் துங்கப்பட்டுள்ளன.
இங்கு வருமானம், இருப்பிடம், ஜாதி, கணவனால் கைவிடப்பட்டவர்,முதல் தலைமுறை பட்டதாரி போன்ற சான்றிதழ்கள், பெண் குழந்தை பாதுகாப்பு, திருமண நிதியுதவி போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தவிர வாக்காளர் அட்டை பெறுதல், திருத்தம் செய்தல், பாஸ்போர்ட் பெறுதல் போன்ற சேவைகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சேவைக்கு தகுந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
வருவாய் துறை சான்றிதழ் பொறுத்தவரை 'ஆன்லைனில்' விண்ணப்பித்தவுடன் சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர், மண்டல வட்டாட்சியரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ஒப்புதல் அளித்தவுடன் விண்ணப்பதாரரின் அலைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். அதன்பின் சம்பந்தப்பட்ட 'இ சேவை' மையத்தில் சான்றை பெற்று கொள்ளலாம்.
'ஆன்லைனில்' வி்ண்ணப்பித்தாலும் காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் பணம் இல்லாமல் எந்த சான்றிதழும் பெற முடியாத நிலையே உள்ளது. 'இசேவை' மையத்தில் பேப்பர் இல்லை; 'சர்வர்' கிடைக்கவில்லை என கூறி ரசீதை கொடுக்கவே 3 நாட்களுக்கு மேல் கடத்துகின்றனர். அதேபோல் சான்றிதழும் குறித்த நாளில் கிடைப்பதில்லை.
அதே சமயம் 'புரோக்கரிடம்' 200 முதல் 500 ரூபாய் கொடுத்தால் போதும் விண்ணப்பம் செய்த நாளிலேயே ரசீதை பெற்று கொள்ளலாம். ஓரிரு நாளிலேயே சான்றிதழும் கிடைத்துவிடும். இதனால் வேறு வழியின்றி கேட்கும் பணத்தை கொடுத்து சான்றிதழ்களை பெற்று செல்கின்றனர். கிராம உதவியாளர்களில் சிலர் கிராமங்களுக்கு செல்லாமல் தாலுகா அலுவலகத்திலேயே இருக்கின்றனர்.
அண்ணாத்துரை, புதுவயல்: காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் 'புரோக்கர்' மூலம் சென்றால் தான் வருவாய்த்துறை அதிகாரிகளை பார்க்க முடிகிறது. மக்கள் அலையக்கூடாது; லஞ்சம் ஒழிய வேண்டும், என்ற அடிப்படையில் தான் 'இசேவை' மையம் கொண்டு வரப்பட்டது. ஆனால் மக்கள் அலைச்சலும், லஞ்சமும் குறைந்தபாடில்லை. 'புரோக்கர்கள்' இல்லாத தாலுகாவாக மாற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்