ஜம்மு பல்கலைகழகத்தின் டாக்டர்.நீலு ரோஹ்மேத்ரா இமாச்சல பிரதேசம் சிர்மார் இந்திய மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனராக
நியமிக்கப்பட்டுள்ளார். அதன் மூலம் ஐஐஎம்-ன் முதல் பெண் இயக்குனர் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார். பேராசிரியர் நீலு ரோஹ்மேத்ரா தற்போது ஜம்மு பல்கலைக்கழகம் வணிக பள்ளியின் கத்துவா மற்றும் பிலாவர் வளாகங்களின் தலைவராக உள்ளார். மேலும், ஜம்மு பல்கலைகழகம், இடை-கலாச்சார ஆய்வு மற்றும் மனித வள மேலாண்மை சர்வதேச மையத்தின் இயக்குனராக உள்ளார். டாக்டர் நீலு ரோஹ்மேத்ரா உட்பட ஐஐஎம்-ன் 10 தலைவர்களை அரசு நியமித்தது.
இவர்கள் இந்த பதவியில் ஐந்து ஆண்டுகள் வரை அல்லது 65 வயதாகும் வரை செயல்படுவார்கள்.
டாக்டர் நீலு ரோஹ்மேத்ரா மனித வள மேம்பாட்டில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர். ஜம்மு பல்கலைகழகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக மேலாண்மை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 1989 ஆம் ஆண்டு, மேலாண்மை கல்வியில் உதவி பேராசிரியராகச் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஐஎம் புத்தகயா, ஐஐஎம் சிர்மார், ஐஐஎம் விசாகப்பட்டினம், ஐஐஎம் திருச்சி, ஐஐஎம் நாக்பூர், ஐஐஎம் சம்பல்பூர், ஐஐஎம் ராய்ப்பூர், ஐஐஎம் ரோடக், ஐஐஎம் ராஞ்சி மற்றும் ஐஐஎம் பெங்களூரு ஆகிய மேலாண்மை நிறுவனங்களுக்கு இயக்குனர்களை நேற்று அரசு நியமனம் செய்தது. இப்போது நான்கு ஐ.ஐ.எம் (ஐஐஎம் ஜம்மு, ஐஐஎம் அமிர்தசரஸ், ஐஐஎம் உதய்பூர் மற்றும் ஐஐஎம் கோழிக்கோடு) ஆகியவை இயக்குனர்கள் நியமிக்கப்படாமல் உள்ளன