விவசாயிகள் வழக்கில் உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு!

‘தமிழக விவசாயிகள் நலன் தொடர்பான திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்று தமிழக அரசின் வேளாண் மற்றும் சட்டத்துறை செயலர்கள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



தமிழகத்தில் பருவமழை பொய்த்துப்போனதாலும், காவிரியில் தண்ணீர் திறந்துவிடாததாலும் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால், விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்கள் கருகியது. விவசாயம் செய்வதற்கு வாங்கிய பயிர்க்கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் விவசாயிகள் கடன் தொல்லைக்கு உள்ளாகியுள்ளனர். இதனால், நெருக்கடிக்குள்ளாகும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்ந்து வருகிறது. அண்மையில் மத்திய அரசு, தமிழகத்தில் இதுவரை 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் கூடுலாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், டெல்லியில் 41 நாள்கள் தொடர் போராட்டம் நடத்தினர். பின்னர், போராட்டத்தைத் தற்காலிகமாக கைவிட்டுவிட்டு தமிழகத்துக்குத் திரும்பினர்.

இந்நிலையில், தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு பொதுநல வழக்காடு மையம் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கன்வில்கர் அடங்கிய அமர்வு முன்பு மே 3ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையில் உதவ நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சங்கர் நாராயணன் ஆஜராகி, ‘எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைத்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றிய விழிப்பு உணர்வு, கொள்முதல் நிலையங்கள், மண்டிகள் தொடர்பான விழிப்பு உணர்வு விவசாயிகளிடம் இல்லை’ என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நரசிம்மா ஆஜராகி, ‘தமிழகத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வறட்சியால் மட்டும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. மாறாக, விவசாய உற்பத்தி ஒன்றையே நோக்கமாகச் செயல்பட்டது இதற்குக் காரணம். இதை மாற்றியமைக்க விவசாய நலன் சார்ந்த வேளாண் முறையை அறிமுகப்படுத்தி வருகிறோம். இது குறித்து வல்லுநர்களுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விவசாயப் பிரச்னைகளுக்கு நிரந்தரத்தீர்வு காண அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது’ என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து வாதிட்ட நாராயணன், ‘வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், எளிதில் அணுகக் கூடிய இடங்களில் விளைபொருள்களுக்கான மண்டிகள், கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுவதை உறுதிப்படுத்த சட்டம் கொண்டு வர வேண்டும்’ என்றார்.

இதையடுத்து, ‘விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்திலும், மாநில அரசால் எடுக்கப்படும் நடவடிக்கைகளை உறுதி செய்யும் நோக்கத்திலும் இந்தப் பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது’ என்று கூறிய நீதிபதிகள், ‘குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து விவசாயிகளுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? விவசாயிகளுக்குத் தேவையான மண்டிகள், கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதா? இவை தொடர்பாக அரசு தொலைக்காட்சியில், விழிப்பு உணர்வு அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றனவா என்பது குறித்த அறிக்கையை மூன்று நாள்களுக்குள் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணை மே 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதன்படி, இந்த வழக்கு நேற்று மே 8ஆம் தேதி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஒரு மனுதாரராக இணைக்கப்பட்டுள்ள, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு சார்பில், ‘விவசாயிகள் தற்கொலைக்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை’ என்று மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கல்வின்கர் அடங்கிய அமர்வு, ‘தமிழக விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லையெனில் உயர்நீதிமன்றத்தை நாடுங்கள்’ என்று கூறி அவருடைய மனுவை நிராகரித்தனர்.

மேலும், ‘தமிழக அரசு விவசாயிகள் நலன் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது குறித்த விவரங்களை தமிழக அரசின் வேளாண் மற்றும் சட்டத் துறை செயலர்கள் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை ஜூலை முதல் வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...