மாணவர்களிடையே சமூக விரோதிகள் ஊடுருவல்... அரசு விடுதி; அந்நியரால் கெடுதி! கண்காணிப்பு இல்லாததால் போலீசாருக்கு புது சிக்கல்!!!

ஆதி திராவிடர் மாணவர்கள் தங்கும் விடுதியில், கண்காணிப்பு இல்லாததால், மாணவர்களிடையே, சமூக விரோதிகள் ஊடுருவி தங்கி வருகின்றனர்; இந்த விவகாரம், போலீசாருக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்து வருகிறது.
கோவை, டாக்டர் பாலசுந்தரம் ரோட்டில் ஆதி திராவிடர் நலத்துறைக்குச் சொந்தமான அரசு விடுதி உள்ளது. இந்த விடுதியில், வீட்டில் இருந்து எட்டு கி.மீ., துாரத்துக்கு அப்பால் கல்லுாரி சென்று
படித்து வரும் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் இலவசமாக தங்க அனுமதி அளிக்கப்படுகிறது. இங்கு தங்குவதற்கு, கல்லுாரி வாயிலாக, ஆதிதிராவிடர் அலுவலரிடம் மாணவர்கள் உரிய முறையில் விண்ணப்பம் செய்து அனுமதி பெற வேண்டும்.
இருப்பது இருபது சதவீதமே!இவ்வாறு அனுமதி பெறும் ஆதி திராவிடர் மாணவர்கள் மட்டுமே, இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு, தங்கிப் படிக்க வேண்டும்; இவர்களுக்காக இரண்டு மாடிகள் கொண்ட கட்டடத்தில், ஏராளமான அறைகள் கட்டப்பட்டுள்ளன. ஏழை ஆதி திராவிட மாணவர்கள், உயர் கல்வி படிக்க வேண்டுமென்ற உயரிய நோக்கோடு, இங்கு தங்கிப் படிப்பவர்களுக்கு உணவு, உறைவிடம் உள்ளிட்ட எல்லாவற்றையும் அரசு இலவசமாக வழங்கி வருகிறது.இந்த விடுதியில், 120 முதல் 150 மாணவர்கள் வரை தங்க வசதி இருக்கிறது; ஆனால், பராமரிப்பின்மை, தண்ணீர் தட்டுப்பாடு, சுகாதாரக்கேடு, மோசமான சாப்பாடு மற்றும் பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால், கல்லுாரி மாணவர்கள் பலரும் இங்கு தங்கிப் படிக்க விரும்புவதில்லை. தற்போதுள்ள நிலையில், அனுமதி பெற்றுள்ள கல்லுாரி மாணவர்கள் 20 சதவீதம் பேர் மட்டுமே, தங்கி இருப்பதாக அதிர்ச்சித் தகவல் கூறப்படுகிறது.மற்ற இடங்களை, முன்னாள் மாணவர்கள், வெளியூர்வாசிகள் என பலரும் ஆக்கிரமித்துள்ளனர். கோவை நகரில், வெவ்வேறு பகுதிகளில் வேலை பார்ப்பவர்கள், வியாபாரம் செய்வோர், வேலை தேடுவோர் என பலரும், இங்கு தங்கிக் கொண்டு, தங்கள் வேலைகளைப் பார்த்து வருவது, அப்பட்டமாகத் தெரிகிறது. இவர்களுடன், கோவை மாநகரில் நடக்கும் பல்வேறு சமூக விரோதச் செயல்களில் தொடர்புடைய பலரும் இங்கு தங்குவது, சமீபத்தில் அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.விடுதியில், மாணவர்கள் போர்வையில் தங்கும் வெளியாட்கள், கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர். அத்துடன், கல்லுாரி மாணவர்களடம் 'நெட்வொர்க்' அமைத்து, போதைப்பொருட்களை சப்ளை செய்வதாகவும், இங்குள்ள சில மாணவர்களே குமுறுகின்றனர். இதற்கு எதிராக, இவர்கள் யாரும் வாய் திறக்க முடியாத நிலையில் உள்ளனர். ஏதாவது புகார் செய்வதாகத் தெரிந்தால், தங்கள் உயிருக்கே ஆபத்து வருமென்று அஞ்சுகின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:கட்டட வேலை உள்ளிட்ட தினக்கூலி வேலைக்குச் செல்வோர், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோர், தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த நபர்கள் என மாணவர்கள் அல்லாத அந்நியர்கள், அதிகளவில் இந்த விடுதியில் தங்கியுள்ளனர். சமூகவிரோதிகள் யாரும், இங்குள்ள தனியார் விடுதிகளில் தங்கினால் சிக்கிக்கொள்வர். குடியிருப்புகளில் தங்கினால், எப்படியும் தகவல் வெளியாகிவிடும்; அதனால், ஆதி திராவிடர் மாணவர்கள் விடுதியை தங்களது புகலிடமாக மாற்றிக் கொண்டுள்ளனர்.
வார்டன்களுக்கு வாடகை!தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி போன்ற பகுதிகளை சேர்ந்த நபர்கள் தனித்தனி கோஷ்டிகளாக பிரிந்து தங்கியுள்ளனர். இவர்கள், தங்கள் பகுதிகளில் போலீஸ் வழக்கு, பிரச்னைகளில் சிக்கும் நபர்களை, கோவைக்கு அழைத்து வந்து தங்களோடு தங்க வைத்துக்கொள்கின்றனர். கொலை, கொள்ளை குற்றவாளிகளும் இதில் அடக்கம். கடந்த வாரத்தில், கொலை குற்றவாளிகள் இங்கு தங்கியது குறித்து சோதனையிட்டு விசாரணை நடத்திச் சென்றனர். விடுதியில் பணியில் உள்ள 'வார்டன்'களும் இதற்கு உடந்தையாக உள்ளனர்; கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு, யாரை வேண்டுமானாலும் தங்க வைப்பது, இவர்கள் தான். சமீபகாலமாக, இந்த விடுதி, சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. உடனடியாக இங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்தி, மாணவர்கள் அல்லாத மற்ற அந்நியர்களை, கடும் நடவடிக்கை எடுத்து, ஒட்டு மொத்தமாக வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால், எதிர்காலத்தில் பெரும் ஆபத்து காத்திருக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மோகனிடம் கேட்டபோது, ''மாணவர்கள் அல்லாத நபர்கள் யாரும் விடுதியில் தங்கவில்லை; போலீசார் வந்து சோதனையிட்டது குறித்து எதுவும் தெரியாது. சமூகவிரோதிகள் யாரேனும் தங்கி இருக்கிறார்களா என்று விசாரிக்கப்படும். அதுபோன்று இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.உண்மை நிலையை ஆய்வு செய்யாமல், பொத்தாம்பொதுவாக ஒரு விஷயத்தை மறுக்கும் இத்தகைய அலுவலர்கள் தான், பல்வேறு முறைகேடுகளுக்கும் அடிப்படைக் காரணமாகவுள்ளனர். இந்த விடுதியில் தங்கும் சமூக விரோதிகளால், நகருக்கோ, நகர மக்களுக்கோ ஏதாவது அசம்பாவிதம், ஆபத்து நேர்ந்தால், அதற்கு இந்த துறையின் அதிகாரிகளே பொறுப்பு ஏற்க வேண்டும்.

அந்நியரை வெளியேற்றினோம்!பந்தயச்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜிடம் கேட்டபோது, ''சில நாட்களுக்கு முன்பும் கூட, அந்த விடுதியில் சோதனை நடத்தி, மாணவர்கள் அல்லாத அந்நியர்களை வெளியேற்றினோம். இது குறித்து, மாவட்ட நிர்வாகத்துக்கு தகவலும் அனுப்பப்பட்டது. ஆனால், மாணவர்களை மிரட்டி, வெளியேற்றிவிட்டு, பலரும் அங்கு தங்குவது இப்போதும் தொடர்ந்து வருகிறது,'' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...