இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய ஐ.டி.
நிறுவனமான இன்ஃபோசிஸ் அமெரிக்காவில் அடுத்தச் சில ஆண்டுகளில் 10,000 ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்போவதாக அறிவித்திருந்தது. இதனால் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு குறையும் என்று கூறப்பட்டது. ஆனால், அமெரிக்காவில் அளிக்கப்படும் வேலைவாய்ப்புக்கு இணையாக இந்தியாவிலும் ஊழியர்களை வேலைக்கு எடுக்க இருப்பதாகத் தலைமை நிர்வாக அதிகாரி விஷால் சிக்கா நேற்று அறிவித்துள்ளார்.
“பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இன்ஃபோசிஸ் நிறுவனம் ஆஃப் கேம்பஸ் முறையில் மட்டும் 19,000 ஊழியர்களைப் பணிக்கு எடுக்க முடிவு செய்துள்ளது. அமெரிக்காவில் 10,000 ஊழியர்களைப் பணிக்கு எடுப்பதினால் இந்தியாவில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவது குறையாது. அடுத்த இரண்டு காலாண்டுகளில் 10,000 நபர்கள் பணிக்கு எடுக்கப்படுவார்கள்” என்று விஷால் சிக்கா கூறியுள்ளார்.
மேலும், 2017 ஏப்ரல் - ஜூன் காலாண்டில் மட்டும் 1,000 நபர்கள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிக்குச் சேர்க்கப்பட்டுள்ளதாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முதன்மை இயக்கு அலுவலர் பிரவீன் ராவ் தெரிவித்துள்ளார். இந்நிறுவனம் இதற்கு முன்னர், 36ஆவது ஆண்டு நிகழ்வின்போது 11,000 நபர்களை ஆட்டோமேஷன் நுழைவால் வெளியேற்ற இருப்பதாக அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
