ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் கைபேசி துறையில் ஏற்படுத்தியுள்ள
மாற்றங்களை பெரிய புரட்சி என்றுதான் சொல்ல வேண்டும். உலகையே நம் கைக்குள் கொண்டுவந்தது இந்த ஆண்ட்ராய்டுதான். இந்தத் தொழில்நுட்ப வசதிகள் வெறும் தொடர்பு சாதனமாக ஒருகட்டத்தில் இருந்தது. பின்னர் அது பொழுதுபோக்கு கருவியாகவும் மாறியது. இன்று அதையும் கடந்து ஒரு நாட்டின் பொருளாதாரத்தை வலுவாக்கும் ஒன்றாகவும் மாறியிருக்கிறது.
இந்தியாவில் கணினி மூலம் இணையம் பயன்படுத்துவோரைவிட ஸ்மார்ட்போன்கள் மூலம் இணையம் பயன்படுத்துவோர்கள்தான் அதிகம் உள்ளனர். இணையதளச் செயலிகளால் இந்தியாவின் உள்நாட்டுப் பொருளாதாரம் உயர்ந்துள்ளதாக சர்வதேசப் பொருளாதார உறவுகள் மற்றம் பிராட்பாண்ட் குழுமத்துக்கான இந்திய ஆய்வு கழகம் கூறியுள்ளது. இணையதளச் செயலிகளால் 2015-16ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.1.4 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாகவும், இது 2020ஆம் ஆண்டில் ரூ.18 லட்சம் கோடி வரை உயரும் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆய்வறிக்கையை, மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா வெளியிட்டார். அதில் “நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இணையதளம் பெரிதும் துணை நிற்கிறது. இணையதளம் மூலமே பல பொருளாதார ஆலோசனைகள் நடைபெறுகிறது. 2020ஆம் ஆண்டில் இணையதளப் பொருளாதாரம் மூலம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 537.4 பில்லியன் டாலர்களை பெறும். இதில் செயலிகள் மூலம் குறைந்தபட்சம் 270.9 பில்லியன் டாலர்கள் கிடைக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
