இந்தியாவில் 1,000 பேருக்கு ஒரு மருத்துவர்
மட்டுமே உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அனுபிரியா படேல் நேற்று (ஜூலை 21) தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 10,22,859 இந்தியாவில் அலோபதி மருத்துவர்கள், மருத்துவ கவுன்சலில் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். அதன்படி 80% மருத்துவர்கள் (8.18 லட்சம் மருத்துவர்கள்) தற்போது மருத்துவச் சேவையில் இருக்கின்றனர். உலக சுகாதார அமைப்பு 1,000 பேருக்கு ஒரு மருத்துவர் என்று நிர்ணயித்த நிலையில் இந்தியாவில் குறைவான மருத்துவர்களே உள்ளனர். இந்தியாவில் மக்கள்தொகை 130 கோடியாக உள்ளது. ஆனால், 1000:0.62 என்ற அளவில், அதாவது 1,000 பேருக்கு ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளார்.
இந்தியாவில் இருக்கும் 479 மருத்துவக் கல்லூரிகளில் கடந்த மூன்றாண்டுகளில் புதிதாக சேர்க்கப்பட்ட 12,870 மருத்துவ இடங்கள் உட்பட மொத்தம் 67,218 இடங்கள் உள்ளன. இந்தியாவின் மக்கள்தொகைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்து வருகிறது.
கடந்த ஆண்டு, உலக சுகாதார மையம் இந்தியாவில் 57% ஆங்கில மருத்துவர்கள் மருத்துவக் கல்வி தகுதி இல்லாதவர்கள் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. கடந்த 2001ஆம் ஆண்டு இந்தியாவில் 37 சதவிகிதமாக இருந்த போலி மருத்துவர்களின் எண்ணிக்கை 57 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தது. மேலும், ஒரு லட்சம் மக்களுக்கு 80 மருத்துவர்கள் தேவைப்படும் நிலையில் ஒரு லட்சம் மக்களுக்கு வெறும் 36 மருத்துவர்கள் இருப்பதாகத் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.