குஜராத் மாநிலத்தின் ஒரு பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள், பள்ளியில் படிக்க
3 கி.மீ. தூரம் தண்ணீரில் நடந்து சென்று வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள தபோய் பகுதியில் அமைந்துள்ள கிராமம் பிரதாபுரா. இங்கு 200க்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அதில் பழங்குடியின மக்களே அதிகம் இருக்கின்றனர்.
இங்குள்ள மக்கள் பள்ளிக்கூடம், மருத்துவமனை போன்ற முக்கிய இடங்களுக்கு செல்ல குறைந்தது 3 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும். இதன் அருகில் உள்ள பகோடர் கிராமத்தை இணைக்க சாலை வசதி உண்டு. ஆனால் அந்த சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இப்போது அந்த பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் சாலை மிகவும் மோசம் அடைந்துள்ளது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரி தத்வி கூறுகையில், நாங்கள் சாலையை சீரமைக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மழைக்காலங்களில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் விரைவில் அதற்கு நிரந்தர தீர்வு காணப்படும் என குறிப்பிட்டார்