‘தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும். 26.7.2017-க்குள் உத்தேச கால அட்டவணையைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று மாநிலத் தேர்தல் ஆணையத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலை குறிப்பிட்ட தேதிக்குள் நடத்தக் கோரி திமுக-வின் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நேற்று (21.7.2017) விசாரணைக்கு வந்தபோது ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்துவது சாத்தியமல்ல என்று தேர்தல் ஆணையம் கூறியது. இதனையடுத்து உத்தேச அட்டவணை தாக்கல் செய்யும்பட்சத்தில் அதற்கு ஏற்ப உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறி வழக்கு விசாரணையை ஜூலை 26ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
மேலும், “உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான உத்தேச கால அட்டவணையைக் கண்டிப்பாக ஜூலை 26ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இதிலும் தேர்தல் ஆணையம் கால அவகாசம் கோரக் கூடாது” என்று மாநிலத் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியும், பின்னர் மே 16ஆம் தேதியும் உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது. ஆனால், மாநிலத் தேர்தல் ஆணையமும், அரசும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஆர்வம் காட்டாததால் திமுக மீண்டும் புதிய மனுத்தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலைக் காலதாமதப்படுத்துவதற்கு, பகுதி திட்ட வரையறை என்பதைக் காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைக்கலாம் என்ற ஐடியாவை சிலர் முதல்வருக்குத் தெரிவித்திருக்கிறார்கள். அதையடுத்து, சட்ட ரீதியாக அதற்கான வேலைகளிலும் பழனிசாமி தரப்பு இறங்கியுள்ளது.