தமிழகம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சரக்கு மற்றும் சேவை வரி தவிர்த்து
கூடுதல் வரி விதித்து வரும் நிலையில் அதற்கு அனுமதி உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையை ஏற்படுத்தும் நோக்கில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் மத்திய மற்றும் மாநில வரிகளை ஒன்றிணைத்து ஒரே வரி முறை கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தேசிய அளவிலான ஜி.எஸ்.டி தவிர்த்து மொத்த விற்பனை சந்தை மற்றும் புதிய வாகனங்களுக்கான பதிவு வரி மாநில அளவில் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்களிடையே குழப்பம் எழுந்துள்ளது.
அதாவது, கடந்த செவ்வாய்க்கிழமை மகாராஷ்டிர மாநில அரசானது தங்களது மாநிலத்தில் புதிய வாகனங்களுக்கான பதிவு வரியை 2 சதவிகிதம் உயர்த்தியது. ஜி.எஸ்.டி. காரணமாக மாநிலத்திற்கு ஏற்படும் ரூ.700 கோடி வரையிலான இழப்பை ஈடுகட்டவே இவ்வாறு வரி உயர்த்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு கூறியது. அதேபோல தமிழகத்தில் சினிமாவுக்கு 30 சதவிகித பொழுதுபோக்கு வரி நிர்ணயிப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் டிக்கெட்டுகளின் விலை உயரும் அபாயம் இருந்தது. இதுவும் வருவாய் இழப்பைச் சமாளிப்பதற்காக விதிக்கப்படுவதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் அதியா கூறுகையில், “மாநில அரசுகள் தங்களது மாநிலங்களுக்குள் புதிய வாகனப் பதிவு வரி, பொழுதுபோக்கு வரி மற்றும் ஸ்டாம்ப் வரி விதிக்க அதிகாரம் மற்றும் உரிமை உள்ளது. இதில் முக்கியமான ஒன்று யாதெனில், பொருள் மற்றும் சேவைகளுக்கு மட்டுமே ஜி.எஸ்.டி. பொருந்தும். எனவே இவ்வாறு மாநில அரசுகள் விதிக்கும் வரிகளில் மத்திய அரசு தலையிடாது” என்று கூறியுள்ளார்