அரசு பள்ளியை தரம் உயர்த்தக்கோரி, மாணவர்கள்
வகுப்பை புறக்கணித்து, நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தும்பேரி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 600 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தும்படி, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், கடந்த, 11 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், தரம் உயர்த்தப்படவில்லை.
இதை கண்டித்து, பள்ளியை உடனடியாக தரம் உயர்த்தக் கோரி, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், நேற்று காலை, 10:00 மணிக்கு வகுப்புகளை புறக்கணித்து, பள்ளி முன் பந்தல் அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பெற்றோர் பங்கேற்றனர்.
தகவல் அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் சடகோபன், பேச்சு வார்த்தை நடத்தினார். அதில், வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தினருடன் சென்று, பள்ளியை தரம் உயர்த்துவது குறித்து பேசலாம் என்று உறுதியளித்தார்.
இதையடுத்து, பகல், 12:00 மணிக்கு ஆர்ப்பாட்டத்தை கை விட்டு, மாணவ, மாணவியர் வகுப்புக்கு சென்றனர்