பெரம்பலுார், காமராஜரிடம் மனு அளிக்கத் துவங்கி, இதுவரை, நான்கு
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்களை, அரசு அதிகாரிகளிடம் வழங்கி, 'பெட்டிஷன் மன்னனாக' வலம் வருகிறார், அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்த, 'சீனியர் சிட்டிசன்' கணேசன்.
அரியலுார் மாவட்டம், சோழன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன், 77. பி.யூ.சி., வரை படித்துள்ள இவர், காமராஜர் மீது தீவிர பற்று கொண்டவர். 1961ல், பக்கத்துக்கு ஊரான செந்துறைக்கு, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, காமராஜர் வந்திருந்த போது, தன் ஊருக்கு பள்ளிக்கூடம் வேண்டி, அவரிடம், கோரிக்கை மனுவை அளித்தார். கணேசன் கோரிக்கையை ஏற்ற காமராஜர், பள்ளிக்கூடம் திறக்க உத்தரவிட்டார்.
தான் கொடுத்த முதல் மனுவே, கோரிக்கையை வென்றெடுக்க உதவியதைத் தொடர்ந்து, இவருக்கு பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற, ஆர்வம் அதிகரித்துள்ளது.இந்நிலையில், 1963ல், அரியலுார் முன்சிப் நீதிமன்றத்தில், அமினாவாக இருந்த, கணேசனுக்கு, அரசு பணி கிடைத்தது. அரசு பணியில் இருந்தாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம், மக்கள் கோரிக்கையை மனுவாக எழுதி, அதை, அவ்வப்போது அரசு அதிகாரிகளிடம் கொண்டு சென்று, பிரச்னைகளை தீர்ப்பதை, வழக்கமாக கொண்டிருந்தார். தொடர்ந்து, 36 ஆண்டுகள் அமினாவாக பணியாற்றிய இவர், 2000ல், ஓய்வு பெற்றார்.
பின், அரியலுார் மாவட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், கோரிக்கைகள், பிரச்னைகள் குறித்து, மனு எழுதி, அரசு அதிகாரிகளை நேரில் சந்திப்பதையே, முழுநேர பணியாக, கணேசன், மாற்றிக் கொண்டார்.அரியலுார் மாவட்டத்தில் நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டம், மக்கள் குறைதீர் கூட்டம், மின்வாரிய நுகர்வோர் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவற்றில், மக்களின் கோரிக்கைகள் குறித்த மனுக்களோடு, ஆஜராகிவிடுவார். இவரது மனுக்கள் மூலம், மக்களின் அடிப்படை கோரிக்கைகள், பல நிறைவேறி உள்ளன.
இதுவரை, நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை, அரசு அதிகாரிகளிடம் கொடுத்திருக்கிறார், கணேசன். 77 வயதிலும், இளைஞனைப் போல, இன்று வரை, மஞ்சள் பையில் மனுக்களோடு, அலைந்து வருகிறார்.
கணேசன் கூறியதாவது:
விவசாய குடும்பத்தில் பிறந்த எனக்கு, மனைவியும், இரு பிள்ளைகளும் உள்ளனர். காமராஜரின் மக்கள் தொண்டு, என்னை ஈர்த்தது. அன்றிலிருந்து, இன்று வரை, மக்கள் கோரிக்கையை, மனுக்கள் மூலம், அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தெரிவித்துவருகிறேன்.காலையில் வீட்டிலிருந்து புறப்பட்டு, ரயில் அல்லது பஸ்சில் அரியலுாருக்கு வருகிறேன்; மனுக்களை கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுப்பேன். நிறைய கோரிக்கைகள் நிறைவேறி உள்ளன. போக்கு வரத்து செலவுகளை பற்றி நான் கவலைப்படவில்லை.
ஆனால், முன்புபோல் உடல் ஒத்துழைக்கவில்லை என்றாலும், என் உயிர் மூச்சு இருக்கும் வரை, மனு அளிக்கும் பயணம் தொடரும்,இவ்வாறு அவர் கூறினார்