8 வயதில் குழந்தை திருமணத்திற்கு தள்ளப்பட்டவர் 21 வயதில் நீட்
தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். அந்த மாணவியின் பெயர் ரூபா யாதவ். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை அடுத்த கரேரி கிராமத்தை சேர்ந்தவர். ராஜஸ்தான் மாநிலத்தின் கிராமப்புற பகுதிகளில் குழந்தை திருமணம் தொடர்கதையாகி வரும் நிலையில் ரூபாவும் அதற்கு இலக்காகிவிட்டார். 3-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது 12 வயதான சங்கர்லால் என்ற சிறுவனுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டனர்.
அப்போது சங்கர்லால் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். திருமணமாகி புகுந்தவீட்டுக்கு சென்ற பின்னரும் படிப்புக்கு யாரும் தடை விதிக்கவில்லை என்ற ஒரே ஆறுதல் ரூபாவை முன்பைவிட கல்வியின் மீது அதிக நாட்டம் கொள்ள செய்திருக்கிறது. 10-ம் வகுப்பில் 84 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஆனால் அந்த ஊரில் 10-ம் வகுப்பு வரை மட்டுமே இருந்ததால் தொடர்ந்து உயர்கல்வி பயில்வது கேள்விக்குறியாகி இருக்கிறது.
ரூபா படிப்பின் மீது நாட்டம் கொண்டிருந்ததாலும், 10-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்ததாலும் 6 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள பள்ளிக்கு சென்று படிக்க முடிவு செய்திருக்கிறார். பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்களும், ரூபா கல்வியை தொடர அனுமதிக்க வேண்டும் என்று அவளுடைய வீட்டாரிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து புகுந்த வீட்டாரும் சம்மதம் தெரிவிக்க, அங்கு சென்று படிப்பை தொடர்ந்திருக்கிறார். 11-ம் வகுப்பில் 81 சதவீதமும், 12-ம் வகுப்பில் 85 சதவீதமும் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
டாக்டராக வேண்டும் என்பதுதான் ரூபாவின் லட்சியமாக இருந்திருக் கிறது. அதனை நனவாக்க அகில இந்திய முதல்நிலை மருத்துவ நுழைவு தேர்வு எழுதியிருக்கிறார். அதில் 415 மதிப்பெண்கள் பெற்று பின்தங்கியிருக்கிறார். இத்தகைய தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும் என்றால் பயிற்சி மையத்துக்கு சென்று பயிற்சி பெற்றால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பயிற்சி கட்டணம் செலுத்தி படிப்பதற்கு அவருடைய குடும்ப பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை. பக்கத்தில் உள்ள கோடா நகரத்துக்கு சென்று பயிற்சி பெறுவதை புகுந்த வீட்டாரும் விரும்பவில்லை.
அதேவேளையில் கணவரும், அவருடைய சகோதரரும் மட்டுமே ஆதரவாக இருந்திருக்கிறார்கள். இருவரும் ஆட்டோ ஓட்டி ரூபாவின் பயிற்சிக்கு தேவையான பணத்தை சேமிக்க தொடங்கியிருக்கிறார்கள். கடன் வாங்கி கோடா நகருக்கு பயிற்சிக்கு அனுப்பியிருக்கிறார்கள். அங்கு ஓராண்டு பயிற்சி பெற்ற நிலையிலும் ரூபாவால் மருத்துவ நுழைவு தேர்வுக்கு தன்னை தயார்படுத்திக்கொள்ள முடியவில்லை. மீண்டும் ஓராண்டு பயிற்சி பெற வேண்டியிருந்திருக்கிறது. மீண்டும் பணம் செலுத்தி படிப்பது ரூபாவால் இயலாத விஷயமாக இருக்க, பயிற்சி மையத்தினரே ரூபாவின் நிலைமையை புரிந்து சலுகை கட்டணத்தில் பயிற்சி வழங்கி இருக்கிறார்கள்.
“சிறுவயதிலேயே திருமணமானதால் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்று சுயபச்சாதாபம் கொள்ளாமல் என்னுடைய கனவை துரத்தியபடி கடினமாக படித்தேன். என்னுடைய ஆர்வத்திற்கு கணவர் உள்பட குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைத்தது. என் கணவர் மாடுகளை விற்றும், ஆட்டோ ஓட்டியும் பணம் கொடுத்தார். பயிற்சி நிறுவனமும் என் கட்டணத்தில் தள்ளுபடி செய்ததும் பயிற்சியை தொடர உதவிகரமாக இருந்தது. வீட்டு வேலைகள் செய்து கொண்டு படிப்பிலும் கவனம் செலுத்துவது கடினமான விஷயமாகவே தோன்றியது. ஆனாலும் எப்படியாவது கஷ்டப்பட்டு படித்து மருத்துவ நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றுவிடுவேன் என்பதில் உறுதியாக இருந்தேன்” என்கிறார்.
அவருடைய கடின முயற்சி வீண்போகவில்லை. இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் 603 மதிப்பெண்கள் பெற்று 2,283-வது இடத்தை பிடித்து மருத்துவ படிப்புக்கு தகுதி பெற்றுவிட்டார். ராஜஸ்தான் மாநில மருத்துவ கல்லூரியில் சேர்ந்து எம்.பி.பி.எஸ். படிக்க இருக்கிறார்.