ஜி.எஸ்.டி குறித்த புகார்களை தெரிவிப்பதற்கான தொடர்பு எண்ணை மத்திய நிதி அமைச்சகம்
அறிவித்துள்ளது.
ஜூன் 30ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. ஜூலை 1ஆம் தேதி முதலே பொதுமக்களும், வணிகர்களும் பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். ஜி.எஸ்.டி குறித்த மக்களின் பிரச்னைகளையும், சந்தேகங்களையும் அணுக மத்திய அரசு சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது புதியதாக ஒரு சிக்கல் தோன்றியுள்ளது. ஜி.எஸ்.டி அதிகாரிகள் என வேடமணிந்த சிலர், வணிகர்களுக்கும், நுகர்வோருக்கும் தொல்லை கொடுப்பதாக சில தரப்புகளில் இருந்து புகார்கள் வந்துள்ளன. இந்த பிரச்னை தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
ஜூன் 8ஆம் தேதி, நிதியமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “நிர்ணயமற்ற சில நபர்கள், ஜி.எஸ்.டி அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு, நுகர்வோருக்கும், வியாபாரிகளுக்கும் தொல்லை கொடுப்பதாக புகார்கள் வந்துள்ளன.
ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட இந்த நேரத்தில் வியாபாரிகளுக்கும், வணிகர்களுக்கும் தேவையான உதவிகளை செய்யவே விரும்புகிறோம் என டெல்லி மண்டலத்துக்கான ஜி.எஸ்.டி தலைமை ஆணையர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
அதிகாரம் வழங்கப்படாத எந்த அதிகாரியும், வணிகர்கள் மற்றும் வியாபாரிகளின் கடைகளுக்கு செல்ல அனுமதி கிடையாது.
போலி ஜி.எஸ்.டி அதிகாரிகளின் தொல்லைகளை சந்தித்தால், 011-23370115 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்” என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
