ஜியோ நிறுவனத்துக்குப் போட்டியாக ஸ்மார்ட்போன்
விற்பனையில் ஏர்டெல் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் களமிறங்கவுள்ளன.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் இந்த மாதம் நடைபெற்றது. இதில் ஜியோ நிறுவனத்தின் குறைந்த விலையிலான ஸ்மார்ட்போனை அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி அறிமுகப்படுத்தினார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஏற்கெனவே நகர்புற மக்களிடம் ஜியோ நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், கிராமப்புற மக்களையும் ஜியோ சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் ஜியோ நிறுவனத்தின் கிராமப்புற வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே ஜியோ நிறுவனத்தால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது நிலைமை சரியாகி வருவதாக மற்ற நிறுவனங்களின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கிராமப்புற மக்களையும் கவரும் விதத்தில் ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையால் மற்ற நிறுவனங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன. எனவே வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், போட்டியைச் சந்திக்கவும் ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களோடு இணைந்து பிரத்யேக ஸ்மார்ட்போன்களை வெளியிட முடிவு செய்துள்ளன.
