பெரும்பாலான இந்தியர்கள் வேலைக்காக தங்கள் நாட்டை விட்டு சவுதி அரேபியா
உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்கள் சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.
மத்திய அரசு சவுதி செல்லும் இந்தியர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சவுதி அரேபியாவில் தடை செய்யப்பட்ட பொருட்களை இங்கிருந்து கொண்டு செல்ல வேண்டாம். செல்போன் மற்றும் லேப் டாப் கம்யூட்டரில், சவுதியில் தடை செய்யப்பட்ட ஆபாச படங்கள் உள்ளிட்டவற்றை வைத்து கொள்ள வேண்டாம். ஏனெனில், மேற்கூறிய விதிமுறைகளை மீறுபவர்களுக்கு சிறைத்தண்டனை உள்ளிட்ட தண்டனைகள் அளிக்கும் நடைமுறை சவுதியில் அமலில் உள்ளது.
பில்லி, சூனியம் போன்ற செயல்கள் தடை செய்யப்பட்டவை. இதை செய்பவர்களுக்கு மரண தண்டனை அளவுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும். அதனால், கறுப்பு கயிறு, மோதிரம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். போதை பொருட்கள், பான் மசாலா, பன்றிகறி, இஸ்லாம் தவிர வேற மதங்கள் குறித்த குறிப்புகள் இருக்க கூடாது.
திருத்தப்பட்ட வழிமுறைகளின் படி, ஏஜென்ட்கள் பற்றி இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலைக்கு ஏற்பாடு செய்யும் ஏஜென்ட்கள் சேவை கட்டணமாக,ரூ. 20 ஆயிரத்திற்கு மேல் வசூலிக்க கூடாது. நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் அரபு மற்றும் ஆங்கிலத்தில் வேலைவாய்ப்பு விவரங்களை உறுதிப்படுத்த வேண்டும். சவுதி வேலை வாய்ப்பு அமைச்சகம் அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இலவச செல்போன் சிம் கார்டு வழங்குகிறது. எனவே, இந்திய ஊழியர்கள் விலை குறைந்த ஸ்மார்ட் போனை கொண்டு சென்றால் போதும். கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளவர்கள் வேலை வாய்ப்பு விசா, ஹஜ் அல்லது உம்ரா விசாவின் கீழ் சவுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சவுதி அரேபிய விதிகள் புலம்பெயர்ந்து செல்பவர்களை தீவிரமாக ஆராய்வது எப்போதுமே இருந்து வருகிறது. இதனால், 26,000-க்கும் மேற்பட்டவர்கள் விரைவில் இந்தியாவுக்குத் திரும்பி விடுகின்றனர். சவுதி அரேபியாவில் சரியான ஆவணங்கள் இல்லாமலோ அல்லது வேறு வேலையை பெறும் நம்பிக்கையுடன் தங்கள் விசா காலம் முடிந்தும் வேலை தேடுபவர்களை 90 நாள் மன்னிப்பு திட்டத்தின் கீழ் வீட்டிற்கு திரும்ப அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
