வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்கள் அதில் பகிர்ந்துகொள்ளும் பொதுமக்களின் தகவல்களை
வாட்ஸ்அப் நிறுவனம் வணிகரீதியாகத் தனது மூல நிறுவனமான ஃபேஸ்புக்குடன் பகிர்ந்துகொள்ளும் என அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பொதுமக்களின் அந்தரங்க தகவல்கள், வாழ்வுரிமையின் அங்கம். அதை தொலை தொடர்பு நிறுவனங்கள் சுதந்திரமாக பகிர்ந்து கொள்ள முடியாது என நேற்று ஜூலை 22ம் தேதி மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு வாட்ஸ்அப்’ நிறுவனம் ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பு என்னவென்றால், வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்கள் பகிர்ந்துகொள்ளும் தனிப்பட்ட தகவல்கள், வர்த்தக ரீதியாக தனது மூல நிறுவனமாக உள்ள பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும், இந்த நிபந்தனையில் விருப்பம் இல்லாதவர்கள் வாட்ஸ்அப்பிலிருந்து விலகிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது. வாட்ஸ்அப் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பலரையும் அதன் பயன்பாட்டாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருப்பினும், வாட்ஸ்அப் பயன்படுத்தி பழக்கப்பட்டுப் போனவர்கள் வாட்ஸ்அப்பிலிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர்.
வாட்ஸ்அப் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு தனிநபர் அந்தரங்க உரிமையை மீறும் செயல் என்று பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, வாட்ஸ்அப் நிறுவனத்தின் இந்த அறிவிப்பை எதிர்த்து மாணவர் கர்மன்ய சிங் சரீனால் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று ஜூலை 22ம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில், வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் அதில் பகிர்ந்துகொள்ளும் போட்டோ, ஆடியோ, வீடியோ, தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக் உடன் பொதுவில் பகிர்ந்துகொள்ளப்படும் என்பது குடிமக்களின் தனிநபர் அந்தரங்க உரிமையை மீறும் செயல். இது அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் தனி நபர் உரிமையை மீறும் செயல் என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், பி.எஸ்.நரசிம்மா சார்பில் வாதிடுகையில், “பொதுமக்களின் அந்தரங்க தகவல்கள், வாழ்வுரிமையின் அங்கம். அதை தொலை தொடர்பு நிறுவனங்கள் அல்லது சமூக வலைத்தளங்கள் சுதந்திரமாக பகிர்ந்து கொள்ள முடியாது. வாட்ஸ் அப், பேஸ் புக், ஸ்கைப் போன்ற சமூக வலைத்தளங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த ஒழுங்குமுறை சட்டம் இயற்ற சிந்தித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் ஒரு தீர்வை எட்ட வேண்டுமானால், தனிநபர் அந்தரங்க உரிமை விவகாரம் தொடர்பான ஆதார் வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
