விதிகளின்படி செயல்பட்ட ஜனாதிபதி


வரும், 25ம் தேதி, நாட்டின், 14வது ஜனாதிபதி பதவியேற்க உள்ள நிலையில்,
பிரணாப் முகர்ஜி, 81, ஜனாதிபதி பதவியில் இருந்து விலக உள்ளார். வரும், 23ம் தேதி அவருக்கு மத்திய அரசு சார்பிலும், எம்.பி.,க்கள் சார்பிலும் பிரிவுபசார விழா நடக்க உள்ளது; அதற்கு முன்னதாகவே, புதிய ஜனாதிபதி யார் என்பது தெரிந்துவிடும்.மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த, பிரணாப் முகர்ஜி, தன், 60 ஆண்டுகால பொது வாழ்க்கையில், பல ஏற்றங்களை பார்த்தவர்.

நீண்ட அரசியல் அனுபவம்

முன்னாள் பிரதமர் இந்திராவின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாகவும், நிதி, ராணுவம், வெளியுறவு என, பல்வேறு துறைகளின் மத்திய அமைச்சராகவும் அவரது செயல்பாடுகள், பல்வேறு கட்சித் தலைவர்களாலும் பாராட்டப்பட்டுள்ளன; ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசில், இரண்டாவது இடத்தில் இருந்து, அவர் வழிநடத்தினார். தொழில் பக்தி, கடின உழைப்பாளி, பிரச்னைகளுக்கு சரியான தீர்வை அளிக்கக் கூடியவராக அவர் திகழ்ந்தார்.
லோக்சபாவின் முன்னவராகவும் செயல்பட்டார். 2012ல், ஜனாதிபதி தேர்தலில், 70 சதவீத ஓட்டுகளைப் பெற்று, வெற்றி பெற்றார்.
நீண்ட அரசியல் அனுபவம், பார்லிமென்ட் அனுபவம் உள்ள பிரணாப், தற்போது, நாட்டின் வரலாற்றுபக்கங்களில் மிகச் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதும், பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களின் மரியாதையையும், அபிமானத்தையும், நட்பையும் பெற்றவர். நாட்டின் ஜனாதிபதிகள் ஒவ்வொருவரும், தங்கள் முத்திரையை பதித்து சென்றுள்ளனர்.

மோதல் போக்கு இல்லாமல்,

மக்களால் அதிகம் விரும்பப்படும், குழந்தைகளின் ஆசானாக, மறைந்த அப்துல் கலாம் விளங்கினார். அந்த வகையில், ஜனாதிபதியாக கடந்த, ஐந்து ஆண்டுகள் இருந்து, தற்போது அப்பதவியில் இருந்த விடைபெறும் பிரணாப் முகர்ஜியும், தனி முத்திரையை பதித்துள்ளார்.
எந்த சூழ்நிலையிலும், அரசியல் நோக்கத்தோடு செயல்படாமல், எந்தப் பாகுபாடும் இல்லாமல், அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டே, தன் அரசியலமைப்பு சட்டப் பணியைஅவர் செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசுடன் மோதல் போக்கு இல்லாமல், ஆலோசனை வழங்கும், நாட்டின் முதல் குடிமகனாக அவர் சிறப்பாக செயல்பட்டார். மத்திய அரசு பல அவசர சட்டங்களை கொண்டு வந்தபோது, அதற்கு தன் அதிருப்தியை தெளிவாக தெரியபடுத்தினார்.

அதேபோல், பார்லிமென்ட்டை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடக்கியபோது, 'உங்கள் வேலையை ஒழுங்காக செய்ய வேண்டும்' என, அறிவுரையில் கடுமையையும் காட்டினார். சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டு செயல்படக் கூடாது என்பதை, அருணாச்சலப் பிரதேசத்தில் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட கவர்னர் ஜோதி பிரசாத் ரன்தாவாவை பதவி நீக்கம் செய்து வலியுறுத்தினார்.
ஆசிரியராகப் பணியாற்றியவர் என்பதால், கல்வி தான் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் என்பதை, அனைத்து இடங்களிலும் அவர் சுட்டிக்காட்டி வந்தார். கல்வியாளர்களுக்காக, ஜனாதிபதி மாளிகையை திறந்துவிட்டார். ஜனாதிபதி பொறுப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை, அடுத்த வருபவருக்கு உணர்த்தும் ஆசானாக மட்டுமல்லாமல், மற்ற அரசியல்வாதிகளுக்கு ஒரு முன்னோடியாகவும் தன் முத்திரையை பதித்துள்ளார் பிரணாப் முகர்ஜி

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...