அடுத்த நடவடிக்கைக்கு தயாராகும் வருமான வரித்துறை; தமிழகத்தில் 25 ஆயிரம் பேருக்கு சிக்கல்!!!


செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பின் போது, வங்கிகளில் அதிக தொகையை,
'டிபாசிட்' செய்த, தமிழகத்தை சேர்ந்த, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம், வருமான வரித்துறை விளக்கம் கேட்டுள்ளது.
நாட்டில் உள்ள கறுப்புப்பணம் மற்றும் பதுக்கல் பணத்தை வெளிக்கொணர, 2016 நவ., 8ல், 5௦௦, 1,௦௦௦ ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார்.
அப்போது, கணக்கில் காட்டாமல் பதுக்கி வைத்திருந்த, 1,000, 500 ரூபாய் நோட்டுக்களை, பலர் வேறு வழியின்றி வங்கிகளில், 'டிபாசிட்' செய்தனர்.

திரட்டிய வங்கிகள்

சிலர், வருமான வரித்துறை தங்களை கண்காணிக்கலாம் என்ற சந்தேகத்தில், உறவினர்கள் அல்லது வேறு நபர்களின் வங்கி கணக்குகளில், டிபாசிட் செய்தனர். இதையடுத்து, நீண்ட நாட்களாக பணம் எதுவும் டிபாசிட் செய்யப்படாமல், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பின் போது, திடீர் பணப்புழக்கம் அதிகரித்த வங்கிக் கணக்குகள்; அதிக தொகை, டிபாசிட்டான வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களை, வருமான வரித்துறை சேகரித்தது.
அந்த தகவல்களை திரட்டிய வங்கிகள், எஸ்.எப்.டி., எனப்படும், நிதி விவரங்கள் தொடர்பான அறிக்கையை, வருமான வரித்துறைக்கு அனுப்பின.
அதன் அடிப்படையில், முதல் கட்டமாக, 2016, நவ., - டிச., மாதங்களில், 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக, டிபாசிட் செய்த, 18 லட்சம்பேருக்கு, வருமான வரித்துறை விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பியது. வருமான வரி தாக்கல் செய்வோருக்கு, இ - மெயில் மற்றும் அலைபேசி எஸ்.எம்.எஸ்., மூலமாகவும்; கணக்கு தாக்கல் செய்யாதோருக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டன. அதில், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர், ஆன்லைனில், கணக்கு விவரங்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இரண்டாவது கட்டமாக, 5.50 லட்சம் பேரிடம், வருமான வரித்துறை, விளக்கம் கேட்டு, ஒரு வாரத்திற்கு முன், தகவல் அனுப்பியுள்ளது. இதில், தமிழகத்தில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம், விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

தமிழகம் முதலிடம்...

இது குறித்து, தமிழக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் தான், வருமான வரி ஏய்ப்பு அதிகம் நடந்துள்ளது. செல்லாத ரூபாய் நோட்டுஅறிவிப்பின் போது, இங்கு, 1,300 கோடி ரூபாய்க்கு அதிகமாக வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டு உள்ளது. பினாமி பரிவர்த்தனை சட்டத்தின் கீழும், 400 கோடி ரூபாய்க்கு அதிகமாக சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்டமாக, வங்கிகளில், இரண்டு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக, டிபாசிட் செய்தவர்களுக்கு, டில்லி தலைமையகத்தில் இருந்து, இ - மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ்., மூலமாக, விளக்கம் கேட்டு தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த எண்ணிக்கை, 25 ஆயிரத்திற்கு அதிகமாக இருக்கும்.

முக்கிய ஆலோசனை

சென்னை, நுங்கம்பாக்கத்தில், வருமான வரி தலைமை அலுவலகமான ஆயக்கர் பவனில், தமிழக - புதுச்சேரி பிராந்திய வருமான வரி முதன்மை தலைமை ஆணையர், ஹர்லால் நாயக் தலைமையில், நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், புலனாய்வு பிரிவு உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
அதில், தமிழகத்தில், 25 ஆயிரம் பேரிடம் விளக்கம் கேட்கப்பட்டது தொடர்பாகவும், ஆளுங்கட்சி பிரமுகர்கள் மற்றும் பிரபலங்கள் வீடுகளில் நடந்த சோதனை தொடர்பாகவும், எடுக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்தும், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...