சமீப காலமாக மக்கள் தங்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க
ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், ஹைதராபாத்தில் நீண்ட காலமாக சாலையைச் சீரமைக்காததை கண்டித்து ஐ.டி. ஊழியர்கள் குதிரையில் வேலைக்குச்சென்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திர மாநிலம் மற்றும் ஹைதராபாத்தில் ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்குள்ள நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் சைபராபாத் செல்லும் முக்கிய சாலையில்தான் செல்கின்றனர். அதிகமானோர் பயன்படுத்தும் இந்தச் சாலை நீண்ட காலமாக குண்டும் குழியுமாக இருக்கிறது. சாலையைச் சீரமைக்கக்கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததையடுத்து, சாலையைச் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. தார் சாலையை கான்கிரீட் சாலையாக மாற்றுவதற்காகச் சாலைகள் தோண்டப்பட்டதால், வேறு வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இதனால், இரண்டரை மணி நேரம் கால தாமதம் ஏற்படுகிறது. சாலை சீரமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி, ஐ.டி. ஊழியர்கள் சிலர் குதிரையில் வேலைக்குச் சென்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து குதிரை சவாரி செய்த ராம்ஜீத் சிங் கூறுகையில், “பருவமழை காலத்தில் சாலை பணி மேற்கொள்ளப்பட மாட்டாது என்று ஹைதராபாத் மாநகராட்சி கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சைபராபாத் நகரில் உள்ள சாலை மிகவும் பரபரப்பான சாலையாகும். இந்தச் சாலையைச் சீரமைக்க குறைந்தபட்சம் ஆறு மாத காலம் ஆகும் என அவர்களுக்கு தெரியும். ஏன் அவர்கள் அதற்கான மாற்று பாதை குறித்து முன்கூட்டியே திட்டமிடவில்லை? சாலையைச் சீரமைக்கும் பணி மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குத் தொடர்ந்தால், ஒவ்வொரு நாளும் அனைத்து பயணிகளும் சித்ரவதை அனுபவிக்க வேண்டி இருக்கும். மேலும், நீண்ட நேரம் வாகனம் ஓட்டினால் கழுத்து மற்றும் பின் பகுதியில் வலி ஏற்படும்” என தெரிவித்துள்ளார்.
ஐ.டி. ஊழியர்கள் முதன்முதலில் ட்விட்டரில் ‘ஒய் திஸ் கொலவெறி’ என்ற ஹேஸ்டேக் உடன் ட்வீட் செய்தனர். இந்தச் சமூக ஊடகப்பிரசாரம் அதிகாரிகளின் மௌனத்தை மட்டுமே எதிர்கொண்டது. இதனால், “எங்களுடைய ஆன்லைன் சத்தியாகிரகம் தொடரும். மேலும், புதுமையான பிரசாரங்களைக் கொண்டு வருவோம். அவர்கள் குடிமக்களுக்காக வழங்கப்பட்டதை எடுக்க முடியாது” என ஐ.டி. ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்னும் இதுகுறித்து அரசாங்கம் எந்தவித பதிலும் அளிக்கவில்லை
