கடந்த நிதியாண்டில் (2016-17) இந்திய இ-காமர்ஸ் துறையின் மதிப்பு 33 பில்லியன்
டாலராக அதிகரித்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் நுகர்வோர் விவகாரத்துறை இணையமைச்சர் சி.ஆர்.சவுத்ரி எழுத்துபூர்வமாக அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, “2016-17ஆம் நிதியாண்டில் இந்திய இ-காமர்ஸ் துறையின் வளர்ச்சி 19 சதவிகிதமாகும். அந்த நிதியாண்டில் இ-காமர்ஸ் துறையின் சந்தை மதிப்பு 33 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும், இத்துறையில் நுகர்வோரிடமிருந்து 28,770 புகார்கள் கடந்த நிதியாண்டில் வந்துள்ளன. இந்தப் புகார்கள் தேசிய நுகர்வோர் உதவி மையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் கிட்டத்தட்ட 11,596 புகார்கள் கட்டணத்தைத் திருப்பிச் செலுத்தாது தொடர்பாக வந்த புகார்களாகும். மற்ற புகார்கள்,டெலிவரி மற்றும் தரமற்ற அல்லது போலியான பொருள்களை வழங்கியது தொடர்பாக வந்தவையாகும்.
இந்தப் புகார்களுக்குத் தீர்வுகாணும் வகையில் உடனடியாக அந்நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிறுவனங்களால் உடனடியாக புகார்கள் தீர்க்கப்படவில்லையென்றால் நுகர்வோர் உடனடியாக நுகர்வோர் மன்றத்தை அணுக அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்றார்.