சேவை விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அமேசான் இந்தியா நிறுவனம்
இந்தியாவில் சுமார் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளது,
அமெரிக்காவின் மிகப்பெரிய ஆன்லைன் மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியாவிலும் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிறுவனம் மேம்பட்ட சேவை, உரிய நேரத்தில் டெலிவரி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக இந்தியாவின் ஃபிளிப்கார்ட், ஸ்நாப்டீல் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்குக் கடுமையான போட்டியை வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் பல்வேறு புதிய சேவைகளை அறிமுகப்படுத்தவும், தற்போது செயல்பாட்டில் இருக்கும் திட்டங்களை விரிவாக்கம் செய்யவும் அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் மட்டும் சுமார் 1,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைகளில் இந்தப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 1,000 வேலைவாய்ப்புகள் ஒரு தோராய அளவுதான் என்றும், நிறுவனத்திற்குத் தேவையான தொழில்நுட்பத்தில் திறமையான ஆட்கள் கிடைத்தால் கூடுதலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் அமேசான் நிறுவனம் கூறியுள்ளது.
தற்போதைய நிலையில் உலகம் முழுவதும் சுமார் 3,41,000 ஊழியர்களுக்கு அமேசான் நிறுவனம் வேலைவாய்ப்பு அளித்துள்ளது. மேலும், இந்திய அலுவலகங்களில் மட்டும் சுமார் 5,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதன் மூலம் அமெரிக்காவை அடுத்து இந்தியாவில் தான் அமேசான் அதிகளவிலான ஊழியர்களை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வெளியேற்றி வரும் நிலையில் அமேசானின் இந்த அறிவிப்பு இத்துறை ஊழியர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
