தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் அவற்றின் வாடிக்கையாளர் சந்திக்கும்
அழைப்பு துண்டிப்பு பிரச்னைக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டும் என்று டிராய் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்பின் தலவரான ஆர்.எஸ்.சர்மா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அழைப்பு துண்டிப்பு பிரச்னைக்காக தொலைத்தொடர்பு துறையில் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் அபராதம் விதிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளோம். இந்த நிறுவனங்கள் தொடர்ந்து மூன்று காலாண்டுகளாக இதே நிலையில் அழைப்பு துண்டிப்பு பிரச்னைகளுக்குத் தீர்வு காணாமல் நீடித்தால் அதன் பிறகு அபராதத் தொகை 1.5 சதவிகிதம் உயரும். இதற்கு முன்னர் அழைப்பு துண்டிப்பு பிரச்னைக்கு ரூ.50,000 அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது” என்றார்.
விதிமுறைப்படி, ஒரு தொலைத்தொடர்பு வட்டாரத்தில் 2 சதவிகிதத்துக்கும் மேல் அழைப்பு துண்டிப்பு பிரச்னை இருக்கக் கூடாது. அதேபோல, மிகவும் பிஸியான நேரங்களில் 3 சதவிகிதத்துக்கும் மேல் அழைப்பு துண்டிப்பு பிரச்னை இருக்கக் கூடாது. அவ்வாறு இருப்பின் அந்த தொலைத்தொடர்பு நெட்வொர்க் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் துறையில் நுழைந்த பிறகிலிருந்தே இத்துறையில் விதிமுறைகள் ஒவ்வொன்றாகக் கடினமாக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.