நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15) 71ஆவது சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாபட்டு
வருகிறது. தமிழகத்திலும் அனைத்துப் பள்ளிகளிலும், அரசு அலுவலகங்களிலும் சுதந்திர தின நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. இந்நாளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு துறையில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு அப்துல்கலாம், கல்பனா சாவ்லா விருதுகளை வழங்கினார்.
அப்துல் கலாம் விருது
போரூர் ராமச்சந்திரா பல்கலைக்கழக பேராசிரியர் தியாகராஜனுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. இவர் மஞ்சள் காமாலை குணப்படுத்த வைரோவெப் மருந்தை மருத்துவ தாவரத்தில் இருந்து கண்டுபிடித்தவர். இவர் 345 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், 20 நூல்களையும் வெளியிட்டுள்ளார். 8 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையையும் பெற்றுள்ளார். இவர் செவாலிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்பனா சாவ்லா விருது
திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரீத்திக்கு இவ்விருது வழங்கப்பட்டது. 19 வயதுக்கு உட்பட்ட தமிழக மட்டைப் பந்து அணியின் தலைவியான இவரின் துணிவு மற்றும் சாகச செயல்களை பாராட்டி இவருக்கு விருது வழங்கப்பட்டது. விபத்தில் உடல் உறுப்புகள் முற்றிலும் செயல் இழந்த நிலையில் சக்கர நாற்காலியின் உதவியோடு பல சாகசங்களை செய்து வருகிறார்.
நல் ஆளுமை விருது
சென்னை மருத்துவக் கல்லூரி கல்லீரல் துறை தலைவர் டாக்டர் கே.நாராயணசாமிக்கும், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபாலுக்கும் வழங்கப்பட்டன.
சிறந்த மாநகராட்சி
நெல்லை மாநகராட்சிக்குச் சிறந்த மாநகராட்சி என்ற விருது வழங்கப்பட்டது.
சிறந்த நகராட்சி
சத்தியமங்கலம், பூவிருந்தவல்லி, திருமங்கலம் ஆகிய நகராட்சிகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டது
சிறந்த பேரூராட்சி
பொன்னம்பட்டி, இருகூர், நம்பியூர் ஆகியவற்றுக்கு சிறந்த பேரூராட்சி விருது வழங்கப்பட்டது.
இளைஞர் விருது
இவ்விருது மூன்று பேருக்கு வழங்கப்பட்டது. கோவையைச் சேர்ந்த நோ ஃபுட் வேஸ்ட் அமைப்பின் நிறுவனர் பத்மநாபன், விருதுநகர் மாவட்டம் உமயலிங்கத்துக்கும், பெண்களுக்கான விருது நெல்லை மாவட்டம் ஸ்ரீபதி தங்கத்துக்கும் வழங்கப்பட்டது.
மாற்றுத் திறனாளிகளுக்காக சேவை புரிந்தவர்களுக்காகத் தமிழக அரசு விருதுகாஞ்சிபுரம் கண் அறுவை சிகிச்சை மருத்துவர் வீ.ம.சங்கரனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த சமூகப் பணியாளர் விருது மதுரையைச் சேர்ந்த க்யூர் அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மைய நிறுவனர் இளையபாரிக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த தொண்டு நிறுவனம்
சென்னை மெடிந்தியா நிறுவனத்துக்கும் , மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்கிய திருச்சியைச் சேர்ந்த ஆர்பிட் நிறுவனத்துக்கும் இவ்விருது வழங்கப்பட்டது.
சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாக சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு விருது வழங்கப்பட்டது.
மேலும் மகளிர் நலனுக்காகச் சிறப்பாக தனது தொண்டுகளை செய்து வந்த நீலகிரி ஆதிவாசி நலச்சங்கத்திற்குச் சமூக பணியாளருக்கான விருது வழங்கப்பட்டது.
இவர்களுக்கு விருதுகளுடன் பரிசுத் தொகையும், பதக்கமும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சட்டசபை சபாநாயகர் தனபால், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டார்.
