திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் போஸின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட
வழக்கில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி நேற்று (ஆகஸ்ட் 24) உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். அதற்கு முன்பு, ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. அப்போது அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான உறுதியளிப்பதற்கான ‘பார்ம் ஏ, பி’ படிவத்தில் அரசு மருத்துவர்களின் முன்னிலையில் ஜெயலலிதாவின் கைரேகைப் பெறப்பட்டது. வழக்கமாக கையெழுத்திடும் ஜெயலலிதா வேட்புமனுவில் கைரேகை ஒப்பமிட்டது ஏன் என்று அப்போதே தமிழக அரசியலில் கேள்வி எழுந்தது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக-வின் வேட்பாளர் போஸ் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணன், இந்த வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை நடந்துவரும் நிலையில்... கடைசியாக கடந்த 11ஆம் தேதி விசாரணை நடைபெற்றபோது, ‘அதிமுக வேட்பாளர் போஸ் வேட்புமனுவில் மறைந்த முதலமைச்சர் கைரேகை ஒப்பமளித்தது தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட 20 ஆவணங்களுடன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி ஆகஸ்ட் 24ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது நீதிமன்றம்.
இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க நேற்று ஆகஸ்ட் 24ஆம் தேதி தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி மதியம் 2.15 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அவரை திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்ட டாக்டர் சரவணன் தரப்பில், குறுக்கு விசாரணை செய்யப்பட்டது. அப்போது, ‘ஜெயலலலிதாவின் உடல்நலன் காரணமாக வேட்பாளரின் ஏ, பி படிவங்களில் அவரது கையெழுத்து இல்லாமல் கட்சியின் சின்னமான இரட்டை இலை கிடைக்காது என்கிற நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையத்தைத் தொடர்புகொண்டு அதிமுக கட்சிக்குச் சாதகமாக விரைவில் அந்த ஆவணங்கள் கிடைக்க வழிசெய்யப்பட்டதா?
மேலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி ஜெயலலிதா கைரேகை வைத்த அந்த படிவங்களுக்கு சான்று உறுதி முறையாக செய்யப்படவில்லை.
தவிர, அதிமுக கட்சி தொடர்பான மனுக்களுக்கு மட்டும் விரைந்து முடிவெடுத்து உடனடியாக தீர்வு வழங்கும் தேர்தல் ஆணையம், மற்ற கட்சிகளின் மனுக்களில் அதே வேகத்தைக் காட்டாமல் பாரபட்சம் காட்டியது என்ற புகார் இருக்கிறதே...’ என்பன உள்ளிட்ட பல கேள்விகள் ராஜேஷ் லக்கானியின் முன்பு திமுக வேட்பாளர் தரப்பில் வலுவாக வைக்கப்பட்டது,
2.20 முதல் மாலை 4.40 மணி வரை சாட்சிக் கூண்டில் நின்று ராஜேஷ் லக்கானி பதிலளித்தார். பெரும்பாலான கேள்விகளுக்கு மறுப்பு, சில கேள்விகளுக்கு இருக்கலாம் என்ற வகையில் அவர் பதிலளித்தார். பிறகு, வழக்கை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி.
