மும்பையை சேர்ந்த, 14 வயது சிறுவன், 'புளூ வேல்' என்ற, ' ஆன்லைன் கேம்'
விளையாடி, ஏழாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது, மகாராஷ்டிரா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்யாவில் உருவாக்கப்பட்டது
நீல திமிங்கலம் என தமிழில் அழைக்கப்படும, 'புளூ வேல்' என்ற பெயரில், ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ஆன்லைன் கேம் தான் தற்போது, இணையத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த கேமை, டவுண்லோடு செய்ய வேண்டும். அதன் பிறகு விளையாட தொடங்கும் போது, அதிகாலை, 4 மணிக்கு பேய் படத்தை பார்ப்பது உட்பட, 50 மிக கடினமான பணிகள் கொடுக்கப்படும். ஒவ்வொரு பணியை வெற்றிகரமாக முடிந்த பிறகு அது குறித்து போட்டோ எடுத்து ஒரு ஆதாரமாக பதிவு செய்ய வேண்டும். இறுதி பணி என்பது தற்கொலை தான்.
சட்டசபையில் எதிரொலிப்பு
மும்பை, அந்தேரி பகுதியை சேர்ந்த, 14 வயது சிறுவன் மான்பிரீத் சிங் சகானி என்பவன், ஜூலை, 30ம் தேதி, ஏழாவது மாடியில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளான். அவன், புளூ வேல் கேமை விளையாடி தான் இந்த அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளான் என தகவல் பரவி உள்ளது. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இப்பிரச்னை குறித்து மகாராஷ்டிரா சட்டசபையிலும், நேற்று பேசப்பட்டது. அப்போது முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், '' புளூ வேல் கேம் என்பது மிகவும் ஆபத்தான விளையாட்டாக உள்ளது. இதனால் அனைவரும் கவலை அடைந்துள்ளனர. இப்பிரச்னை குறித்து மத்திய அரசுடன் பேசப்பட்டுள்ளது,'' என்றார்