பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு பொருள்களின் பொட்டலங்களில் எந்தத் தேதிக்குள்
பயன்படுத்த வேண்டும் அல்லது பயன்படுத்த வேண்டிய இறுதி தேதியை லேபிள்களில் குறிப்பிட வேண்டும் என நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என நாடாளுமன்றத்தில் நேற்று (ஆகஸ்ட் 1) மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் சவுத்ரி லோக் சபாவில் எழுத்துபூர்வமாகப் பதில் அளித்தார். அதில், “2011ஆம் ஆண்டு பொட்டலங்களில் அடைக்கப்பட்ட பொருள்களுக்கான சட்டத்தில் காலாவதி தேதி குறிப்பிடுவது குறித்து திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
இதுபோன்ற உணவுகளை மனிதர்கள் சாப்பிடும்போது, அவர்களுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாமல் இருக்க விழிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும். அதற்கு, உணவுப் பொருள்களை எந்தத் தேதிக்கு முன்னதாக பயன்படுத்த வேண்டும் அல்லது பயன்படுத்த வேண்டிய இறுதி தேதி, மாதம், ஆண்டு போன்றவற்றை லேபிள்களில் குறிப்பிட வேண்டும் என கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி அனைத்து நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
உணவுப் பொருள் தரம் மற்றும் அளவு போன்றவற்றை உறுதி செய்வதற்காக இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதுபோன்று, இ-வணிகம் மூலம் விற்பனை செய்யப்படும் பொருள்களில் தயாரிப்பாளர் பெயர், முகவரி, பேக்கிங் செய்பவரின் விவரம், இறக்குமதியாளர் விவரம், பொருளின் பெயர், மொத்த அளவு, எம்.ஆர்.பி., நுகர்வோர் பாதுகாப்பு விவரங்களைக் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். பேக்கேஜ் செய்யப்பட்ட பொருள்களில் அச்சிடப்பட்ட எண்களின் எழுத்துரு அளவு அதிகரிக்க வேண்டும் என்ற உத்தரவு 2018 ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். சட்ட அளவியல் சட்டம், 2009இன் படி, இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்குத் தண்டனை அளிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.