சென்னை மெட்ரோ ரயில் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்த கடந்த
ஜூலை மாதத்தில் 1,500 மாணவர்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதித்ததாக நேற்று ஆகஸ்ட் 1ஆம் தேதி மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திமுக ஆட்சிக் காலத்தில் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்பிறகு ஆட்சிக்கு வந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2015ஆம் ஆண்டில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார். இதையடுத்து, அடுத்த கட்டமாக கடந்த மே 14ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரு பூங்கா முதல் திருமங்கலம் வரை மெட்ரோ சுரங்க ரயில் சேவையைத் தொடங்கிவைத்தார்.
மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட பிறகு பொதுமக்கள் மெட்ரோ ரயிலைப் பயன்படுத்துவதன் மூலம் நள்ளிரவிலும் போக்குவரத்து நெரிசலில் திணறும் சென்னை மாநகரம் நெரிசல் குறைந்து ஆசுவாசம் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. மெட்ரோ ரயில் சேவையை மக்கள் பயன்படுத்தாதற்கு மெட்ரோ ரயிலின் அதிக கட்டணமே காரணம் என்று கூறினர். ஒரு ரயில் நிலையத்திலிருந்து மற்றொரு ரயில் நிலையத்துக்கு செல்ல ரூ.10 கட்டணம். அடுத்தடுத்த ரயில் நிலையங்களுக்குச் செல்ல ரூ.10 கூடுதலாகிக்கொண்டே செல்லும். இப்படியான அதிக கட்டணத்தால் மக்கள் மெட்ரோ ரயில் பக்கம் செல்வது என்பது குறைவாகவே காணப்படுகிறது. இதனால், எதிர்பார்த்த அளவுக்கு மெட்ரோ ரயில் சேவையில் வருமானமும் இல்லை.
இந்த நிலையில், மெட்ரோ ரயில் விழிப்பு உணர்வு பயணம் கடந்த ஜூலை 13ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,500 மாணவர்கள் நேரு பூங்கா முதல் விமான நிலையம் வரை இலவசமாக மெட்ரோ ரயிலில் அழைத்துச் செல்லப்பட்டு, மெட்ரோ ரயில் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கப்பட்டதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இயங்கும் மின்சார ரயில்களில் மிகக் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 வசூலிக்கப்படுகிறது. பறக்கும் ரயிலில் கடற்கரை ரயில் நிலையம் முதல் வேளச்சேரி வரை ரூ.7 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனால், இந்த வழித்தடங்களை பெரிய அளவில் மக்கள் பயன்படுத்திவருகின்றனர். இதுபோல, மெட்ரோ ரயில் சேவையிலும் கட்டணம் குறைத்தால் மக்கள் மெட்ரோ ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்தத் தொடங்குவார்கள்.