பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி 20 வருட சிறை தண்டனை பெற்றுள்ள குர்மீத் ராம் ரஹீம்
சிங்கின் தலைமை ஆசிரமத்தில் இருந்து 18 சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் மீட்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
ஹரியானா மாநிலத்தைத் தலைமை இடமாகக்கொண்டு செயல்படும் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். இவருக்கு வடமாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரமங்கள் உள்ளன. ராம் ரஹீம்மீது கடந்த 2002ஆம் ஆண்டு இரண்டு பெண்களைப் பலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. 14 ஆண்டுகளுக்குப் பின் இந்த வழக்கில் கடந்த 25ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் 38 பேர் கொல்லப்பட்டதையடுத்து, ராம் ரஹீமுக்கான தண்டனை விவரம் சிறை வளாகத்திலேயே அறிவிக்கப்படும் என்று பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம் அறிவித்தது.
அதேபோல், 28.8.2017 அன்று சிறை வளாகத்தில் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
தேரா அமைப்பின் தலைமையகம் சிர்சாவில் 1,000 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. தலைமை ஆசிரமத்தில்தான் இளம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு தற்போது போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராம் ரஹீமுக்கு தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து தலைமை ஆசிரமத்தில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆசிரமத்திலிருந்து ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் வெளியேறி வருகிறார்கள்.
இந்த நிலையில் 29.8.2017 அன்று மாவட்ட நிர்வாகம், தலைமை ஆசிரமத்தில் இருந்து 18 சிறுமிகள், இளம் பெண்களை மீட்டுள்ளது. மேலும் மீட்கப்பட்டவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் 3,000க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் அதே ஆசிரமத்தில் தொடர்ந்து தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. தலைமை ஆசிரமம் தவிர மற்ற இடங்களிலுள்ள ஆசிரமங்கள் சீல் வைக்கப்பட்டுவிட்டன.