தகவல் பாதுகாப்புக்காக இந்தியா இந்த வருடத்தில் (2017) செய்துள்ள செலவு, கடந்த ஆண்டை
விட 12 சதவிகிதம் அதிகமாகும் என்று சந்தை ஆய்வு நிறுவனம் கார்ட்னர் கூறுகிறது.
இந்தியா இந்த ஆண்டில் தகவல் பாதுகாப்புப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்காக 1.5 பில்லியன் டாலர் செலவு செய்திருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 12 சதவிகிதம் கூடுதலாகும் என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து கார்ட்னர் முதன்மை ஆராய்ச்சி ஆய்வாளர் சித்தார்த் தேஷ்பாண்டே கூறும்போது, “இந்தியாவில் பல நிறுவனங்கள் தங்களது பாதுகாப்புத் திட்டங்களை உருவாக்குவதில் இரண்டாவது நிலையை எட்டியுள்ளன. மேலும், ஒரு பரவலான பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டியுள்ளது. தகவல் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து நிறுவனங்கள், நிர்வாக இயக்குநர்கள் மற்றும் நிர்வாக வாரியங்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.
அதேபோல அடுத்த ஆண்டில் இந்தியாவின் தகவல் பாதுகாப்புக்கான செலவு 1.7 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என்றும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவைப் போல சர்வதேச அளவிலும் தகவல் பாதுகாப்புக்கான செலவு அடுத்த ஆண்டில் 93 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. தற்போது சர்வதேச அளவில் தகவல் பாதுகாப்புக்காகச் செய்யப்படும் செலவு 86.4 பில்லியன் டாலர்களாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.