அரசுக்கு ஆதரவு அளிப்பது குறித்து, சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு வரும் போது முடிவு செய்ய உள்ளதாக
அதிமுக கூட்டணி கட்சியை சேர்ந்த தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் கூறியுள்ளனர்.
கோரிக்கை:
தமிழக கொங்கு இளைஞர் பேரவை அமைப்பின் தனியரசு அளித்த பேட்டி: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக தொடர்ந்து பிரச்னைகளை சந்தித்து வருகிறது. பேரறிவாளனுக்கு பரோல் அளித்த எடப்பாடி அரசுக்கு நன்றி தெரிவிப்பது குறித்து ஆலோசனை நடத்தினோம். 3 அணிகளாக பிளவு என்ற நிலையில் ஆட்சிக்கு ஆபத்து என்ற நிலையில், இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் தினகரனை அழைத்து பேச வேண்டும். 19 எம்எல்ஏக்களை அழைத்து பேச வேண்டும். அவர்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்க வேண்டும் இதனை நாங்கள் கோரிக்கை அடிப்படையில் வைக்கிறோம். சட்டசபையில் பெரும்பான்மை நிருபிக்க வேண்டிய சூழல் வருமேயானால் அப்போது, அரசை பாதுகாப்பதற்கான சூழல் குறித்து முடிவு செய்வோம்.
அழிக்க முயற்சி:
மனித நேய மக்கள் கட்சியின் தமிமுன் அன்சாரி கூறியதாவது: தமிழக நலன், வாழ்வாதாரம் ஆகியவற்றில் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும் என்ற நிலையில் செயல்படுகிறோம். பா.ஜ.,வை எதிர்த்து நிற்க வேண்டும் என்ற முடிவு வந்துள்ளோம். அதிமுகவை பா.ஜ., பிளவுபடுத்தியுள்ளது என அனைவரும் கருதுகின்றனர். தமிழக வளர்ச்சிக்கு திராவிட கட்சிகள் முக்கியம்; அக்கட்சிகள் நலன் பாதுகாக்க வேண்டும் முதலில் அதிமுக அழிப்பு, பின்பு திமுக அழிப்பு என பா.ஜ., முயற்சி செய்யும். இதற்கு அதிமுக திராவிட கட்சிகள் இரையாகி விடக்கூடாது. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அவர்களை அழைத்து பேச வேண்டும். பேரறிவாளனுக்கு பரோல் அளிக்கப்பட்டதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவிப்போம். அதிமுக உட்கட்சி விவகாரம், அது குறித்து ஒரளவு தான் கருத்து தெரிவிக்க முடியும் எனக்கூறினார்.
மிரட்டல்:
முக்குளத்தோர் புலிப்படை அமைப்பின் கருணாஸ் கூறியதாவது: தோழமை கட்சி விவகாரத்தில் தலையிடுவது அநாகரீகமானது. எம்எல்ஏ முறையில், எனக்கு ஜெயலலிதா மூலம் சசிகலா வாயிலாக வாய்ப்பு வழங்கப்பட்டது. பன்னீரை அழைத்து மரியாதை கொடுக்கும் இந்த அரசு, சசிகலா, தினகரனை நீக்குவது சரியான முடிவல்ல. கட்சிக்காக நீண்ட பயணத்தை மேற்கொண்ட, தியாகத்தை கொச்சைபடுத்துவது போன்று உள்ளது என்பது எங்களது கருத்து. இவர்களை அழைத்து மரியாதையையும், அங்கீகாரத்தையும் அளிக்க வேண்டும். பா.ஜ., அழுத்ததிற்கும், சூழ்ச்சிகளுக்கும், பலியாக கூடாது.மிரட்டல், அச்சுறுத்தல்களுக்கு ஆளாகாமல், ஜெயலலிதா உருவாக்கிய தனித்தன்மையை இழந்து விடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்