நாட்டையே உலுக்கியது கோராக்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில்
நடந்த குழந்தைகளின் மரணம். கிட்டத்தட்ட எழுபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணிக்க, அது உத்தரப்பிரதேச அரசுக்கு அவப்பெயரையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியது. எனவே, இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையில் அரசே நேரடியாக இறங்கியது. இந்தச் சம்பவம் தொடர்பாக மாநில தலைமைச் செயலாளர் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் அறிக்கை அளித்தனர்.
இந்த விவகாரம் நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்த, அந்த மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜீவ் மிஸ்ரா, அவரது மனைவி டாக்டர் பூர்ணிமா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், மேற்கண்ட இருவர் மீதும் டாக்டர் கபீல் கான், மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வழங்கும் புஷ்பா விற்பனை நிறுவன உரிமையாளர்கள் உள்பட ஒன்பது பேர் மீது ஹஸ்ரத்கஞ்ச் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு கோரக்பூருக்கு மாற்றப்பட்டது. அவர்கள் அனைவர்மீதும் கூட்டு சதி, கொடூர கொலை உள்ளிட்ட இந்திய தண்டனைச்சட்டப் பிரிவுகளின் கீழும், ஊழல் எதிர்ப்புச்சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரணை செய்துவந்த சிறப்புப் படை போலீஸார் மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜீவ் மிஷ்ரா மற்றும் அவரது மனைவி பூர்ணிமா சுக்லா ஆகியோரை கான்பூரில் நேற்று (29.8.2017) கைது செய்தனர். மேலும், இருவரையும் கோரக்பூர் சென்று விசாரிக்க இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் உத்தரப்பிரதேச அரசு தீவிரமாக இருக்கிறது. ஆகவே, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கப்போவது உறுதி என்று நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.