மும்பை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியிடப்பட்டு வருகின்றன
. இந்தநிலையில் சமீபத்தில் தொலைதூர கல்வி எம்.ஏ. தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு எழுதியதில் சுமார் 80 சதவீத மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். குறிப்பாக மானுடவியல் கோட்பாடு என்ற பாடத்தில் அதிகளவு மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
இதில், பல மாணவர்கள் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக தேர்வு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘687 எம்.ஏ. மாணவர்கள் தேர்விற்கு விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 225 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு எழுதிய 462 மாணவர்களில் 99 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல 72 மாணவர்கள் எதாவது ஒரு பாடத்தில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றுள்ளனர். விடைத்தாள் திருத்துவதில் எந்த இடத்தில் தவறு நடந்து இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முயற்சி செய்து வருகிறோம்’’ என்றார்.
தேர்வு முடிவு பற்றி மாணவி சகினா கூறுகையில், ‘சரியாக தேர்வு எழுதவில்லையென்றால் கூட யாரும் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுக்கமாட்டார்கள். நான் நன்றாகவே தேர்வு எழுதி இருந்தேன்’ என்றார். வினாத்தாள் திருத்துவதில் மோசடி நடந்து உள்ளது என மாணவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது