தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இரண்டாவது நாளாக நேற்றும்
டெல்லியில் இருந்த நிலையில்... தமிழ்நாட்டு அரசியல் தொடர்பான விவாதங்களும் டெல்லியில் தொடர்கின்றன.
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் நடத்திய தூய்மை பாரதம், தூய்மை பள்ளிகள் போட்டியில்... இந்திய அளவில் அதிக தூய்மை அரசுப் பள்ளிகள் செயல்படும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கான பரிசு வழங்கும் விழா நேற்று (செப்டம்பர் 1) டெல்லியில் நடந்தது. இதில் தமிழகம் சார்பில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பரிசினைப் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில் நேற்று விழா முடிந்தும் செங்கோட்டையன் உடனடியாக சென்னை திரும்பவில்லை. டெல்லியில் மேலும் சில ஆலோசனைகளை நடத்தியதாகவும், அதன் தொடர்ச்சியாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
செங்கோட்டையனுக்கு துறை ரீதியான பரிசு மட்டுமல்ல... தமிழ்நாட்டு அரசியல் ரீதியான பரிசையும் கொடுக்க டெல்லி மேலிடம் விரும்புகிறது. ஆனால், அவர் இதுபற்றி பிடி கொடுக்கவில்லை. இதை நேற்று நமது மின்னம்பலத்தில் வெளியான, அமித் ஷாவை சந்தித்த செங்கோட்டையன்: அதிர்ச்சியில் எடப்பாடி, ஓ.பி.எஸ். என்ற கட்டுரையில் தெரிவித்திருந்தோம்.
இந்நிலையில் செங்கோட்டையன் மீதான அழுத்தங்கள் தொடர்கின்றன என்கிறார்கள்.
‘’நீங்கள்தான் இப்போது அதிமுகவில் பொதுவான ஆளாக இருக்கிறீர்கள். எனவே பொறுப்பு வந்தால் அதை தட்டிக் கழிக்க வேண்டாம் என்று செங்கோட்டையனிடம் டெல்லி பாஜக தலைவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதுபற்றி தினகரன் தரப்பிடமும் பேசியாகிவிட்டது. அவர்களும் உங்களை ஏற்றுக் கொள்கிறார்கள். இதே நிலைமை தொடர்ந்தால் எடப்பாடி அரசுக்கு எதிராக 40 சட்டமன்ற உறுப்பினர்கள் எதிராகத் திரளும் பட்சத்தில், சட்டசபையை சஸ்பெண்டு செய்யத்தான் வேண்டும். அந்த அளவுக்கு நிலைமையைக் கொண்டு செல்ல வேண்டுமா என்று முடிவு செய்யுங்கள் என்று அமித் ஷாவின் அறிவுறுத்தலின் பேரில் நிர்மலா சீதாராமன் செங்கோட்டையனிடம் சொன்னதாக தெரிகிறது’’ என்கின்றன டெல்லி பாஜக வட்டாரங்கள்.
நாம் செங்கோட்டையன் தரப்பில் இதுபற்றி நேற்று நாம் பேசியபோது, ‘அமைச்சர் முழுக்க முழுக்க துறை ரீதியான காரணங்களுக்காக டெல்லி சென்றார். சனி அல்லது ஞாயிற்றுக் கிழமை அவர் சென்னை திரும்புவார்’’ என்று சொல்கிறார்கள்
