கோலார் தாலுகா மதுவாடி கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில்
புதிதாக ரூ.50 லட்சம் செலவில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டிடத்தை மாவட்ட பொறுப்பு மந்திரியும், மாநில சுகாதாரத்துறை மந்திரியுமான ரமேஷ் குமார் நேற்று திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
அரசு பள்ளிகளை மூடினால் செல்வந்தர்களுக்குத்தான் லாபம். காரணம் ஏழை மக்களும் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில்தான் சேர்க்க நேரிடும். அதனால் செல்வந்தர்கள் தாங்கள் நடத்தி வரும் தனியார் பள்ளிகள் மூலம் மேலும் கோடீஸ்வரனாக மாறுவார்கள்.
அரசு பள்ளிகளை, மேம்படுத்த மாநில அரசு பல திட்டங்களை தீட்டி உள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து ஆரம்ப பள்ளிக்கூடங்கள், உயர்நிலைப்பள்ளிகளில் கூடுதல் கட்டிடங்கள் கட்டவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. அரசு பள்ளிகளை மாநில அரசு எந்த சூழ்நிலையிலும் கைவிடாது. அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு மாநில அரசு என்றும் உறுதுணையாக இருக்கும். அரசு பள்ளிகளை மேம்படுத்துவதே மாநில அரசின் குறிக்கோள் ஆகும்.
இவ்வாறு ரமேஷ் குமார் கூறினார்.