புதுடில்லி:டில்லியில், அனைத்து அரசு துறைகளும், தன்னாட்சி அமைப்புகளும்
, டிஜிட்டல் முறையில், பணப்பரிவர்த்தனை செய்யும்படி, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.டில்லியில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். டில்லி மாநில நிதியமைச்சகம், அனைத்து அரசு துறைகளுக்கும், தன்னாட்சி அமைப்புகளுக்கும், சமீபத்தில், கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், அனைத்து பணப் பரிவர்த்தனைகளையும், 'டிஜிட்டல்' எனப்படும், மின்னணுவியல் முறையில் மேற்கொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்களுக்கு, டிஜிட்டல் முறையில் மட்டுமே, பணப்பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என கண்டிப்பாக கூறப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பற்றிய விழிப்புணர்வை அதிகளவில் ஏற்படுத்த வேண்டும் என, அரசு துறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.கடந்தாண்டு நவம்பரில், செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை, மத்திய அரசு அறிவித்தது.
அப்போது, டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்வது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டது. மத்திய அரசின், டிஜிட்டல் முறை பணப்பரிவர்த்தனை திட்டத்தை, டில்லி அரசும், அதிக முக்கியத்துவம் தந்து, செயல்படுத்த முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.