மாணவர்கள் தற்கொலை: தமிழகம் இரண்டாமிடம்!


மாணவர்கள் தற்கொலையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014 - 2016 ஆண்டில் இந்தியாவில் 26,500 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும், அதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும், மத்திய உள்துறை இணை அமைச்சர் ராஜ்ய சபாவில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

‘இந்தியாவில் ஒரு மணிநேரத்துக்கு ஒரு மாணவர் தற்கொலை செய்துகொள்வது மத்திய அரசுக்குத் தெரியுமா? இதைத் தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது?’ என ராஜ்ய சபாவில் திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் வருத்தம் தெரிவித்தார்.

2014ஆம் ஆண்டு 8,068 மாணவர்களும், 2015ஆம் ஆண்டு 8,934 மாணவர்களும், 2016ஆம் 9,474 மாணவர்களும் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

2016ஆம் ஆண்டு அதிகபட்சமாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த 1,350 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, மேற்கு வங்காளத்தில் 1,147 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அடுத்து தமிழகத்தைச் சேர்ந்த 981 மாணவர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 838 மாணவர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் 1,230 மாணவர்களும், தமிழகத்தில் 955 மாணவர்களும், சத்தீஸ்கரில் 730 மாணவர்களும், மேற்கு வங்காளத்தில் 676 மாணவர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2014ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் 1,191 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

மகாராஷ்டிராவிலும், தமிழகத்திலும்தான் அதிகப்படியான மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகவும், மன அழுத்தம், கல்விச் சூழல் பிரச்சினைகள், குடும்ப பிரச்சினைகள், போட்டிச் சூழல், சமூக ஏற்றத்தாழ்வு உள்ளிட்டவையே இதற்கு முக்கிய காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் அதிகளவில் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது, மாணவர்கள் மனநலனைப் பாதுகாக்க பல்வேறு மாநிலங்களிலும் மனநல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கல்வி நிறுவனங்களில் பல்வேறு திறன் வளர்ப்பு திட்டங்களும், கவுன்சிலிங்குக்கான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.



சாதிப் பிரச்சினைக்காகக் குரல்கொடுத்த தலித் மாணவர் ரோஹித் வெமுலா ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராகப் பயின்றுவந்தார். இவர், பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் அம்பேத்கர் மாணவர் அமைப்பின் முன்னணியாளர்களில் ஒருவர் ஆவார். இந்தப் பல்கலையில் சேர்ந்ததிலிருந்தே அரசின் மக்கள் விரோதச் செயல்பாடுகளைக் கண்டித்து மாணவர்களை ஒன்றுதிரட்டி பல்வேறு போராட்டங்கள் நடத்திவந்தார்.

அந்தச் சமயத்தில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மனிதவளத் துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி, ஹைதராபாத் பல்கலைக்கழகத்துக்குக் கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதத்தின் அடிப்படையில், பல்கலைக்கழக நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சிலரை இடைநீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டது.. இடைநீக்கம் செய்யப்பட்டதால், ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா, பல்கலைக்கழக விடுதியில் 2016 ஜனவரி 17 அன்று தற்கொலை செய்துகொண்டார். அவரின் தற்கொலைக்கு பின்னர்தான் உயர்கல்வி நிறுவனங்களில் நிலவிவரும் சமூக சாதிய ஏற்றத்தாழ்வுகள் வெளியே தெரியவந்தது.



2017ஆம் ஆண்டு, அரியலூரைச் சேர்ந்த அனிதா ப்ளஸ் 2 தேர்வில் 1,176 மதிப்பெண்ணும் 196.75 கட் ஆஃப் மதிப்பெண்ணும் பெற்றார். மருத்துவராக வேண்டுமென்ற கனவு நீட் தேர்வினால் தகர்ந்து போனது. நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தினார். இறுதியில் மனமுடைந்து 2017 செப்டம்பர் 1ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு கிளம்பியது.



கடந்த பிப்ரவரி மாதம் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி சாய் தீப்தி தற்கொலை செய்து கொண்டார். பள்ளியில் கட்டணம் செலுத்தாததால், தன்னைத் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்றும், வகுப்புக்கு வெளியே நிற்க வைத்தனர் எனவும் தற்கொலை கடிதம் எழுதியிருந்தார்.

இந்தியா தனது பட்ஜெட்டில் ஆண்டுக்கு 0.06% தொகையை, மாணவர்களின் மனநலனைப் பாதுகாக்கும் திட்டங்களுக்கு செலவழிக்கிறது. பங்களாதேஷ் 0.44% செலவழிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...