தேசிய கீதத்தில் உள்ள ‘சிந்து’ என்ற வார்த்தையைத் திருத்தம் செய்யக் கோரி, மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி ரிபின் போரா தனி நபர் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. காவிரி பிரச்சினை, ஆந்திராவுக்குச் சிறப்பு மாநில அந்தஸ்து, பி.என்.பி வங்கி மோசடி உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளதால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி உள்ளது. இந்த அமளிக்கிடையே ஒரு சில மசோதாக்கள் மட்டும் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில், நமது தேசிய கீதத்தில் இடம்பெற்றுள்ள ‘சிந்து’ என்ற வார்த்தை நாட்டின் எந்தப் பகுதியையும் குறிக்கவில்லை. அதனால், தேசிய கீதத்தில் திருத்தம் செய்ய வேண்டும் எனத் தனி நபர் தீர்மானத்தை, காங்கிரஸ் எம்.பி ரிபின் போரா மாநிலங்களவையில் நேற்று கொண்டு வந்துள்ளார்.
அந்தத் தீர்மானத்தில், இந்தியாவில் முக்கியம் வாய்ந்த பகுதியாகக் கருதப்படும், வடகிழக்கு மாகாணத்தைக் குறிக்கும் எந்தச் சொல்லும் தேசிய கீதத்தில் இடம் பெறவில்லை. அதனால், ‘சிந்து’ என்ற வார்த்தையைத் திருத்தி ‘வடகிழக்கு இந்தியா’ என்று திருத்தம் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், 1950ஆம் ஆண்டில், இந்திய ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத், ஜனவரி 24ஆம் தேதியன்று அரசியலமைப்பு சபையில், ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில், தேசிய கீதத்தில் ஜன கண மன என்ற சொற்களை மாற்றி அமைப்பதற்குச் சந்தர்ப்பம் எழுந்தால், அரசாங்க அங்கீகாரத்துடன் மாற்றி அமைக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதை மேற்கோடிட்டு, ‘சிந்து’ என்ற வார்த்தையை மாற்றி அமைக்கத் தனி நபர் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார்.
