சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் எல்லையை விரிவுபடுத்தி வெளியிடப்பட்ட அரசாணைக்குத் தடை கோரிய வழக்கில் மார்ச் 19ஆம் தேதி பதிலளிக்கத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆயிரத்து 189 சதுர கிமீ பரப்புகொண்ட சென்னை பெருநகர வளர்ச்சி குழும எல்லையை, 8 ஆயிரத்து 878 சதுர கிமீ என எட்டு மடங்காக விரிவுபடுத்திக் கடந்த ஜனவரி 22ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதாவது, சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 55 வருவாய் கிராமங்களுடன் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 67 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டன.
இந்த அரசாணைக்குத் தடை விதிக்கக் கோரி அண்ணா பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் சுப்ரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (மார்ச் 16) விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘புதிய அரசாணைப்படி, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே, சிஎம்டிஏ அதிகாரிகள் பணிச்சுமையால் தவித்துவரும் நிலையில் எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால் கூடுதல் பணிச்சுமை ஏற்படும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், எல்லைகளை விரிவுபடுத்துவது பற்றி சென்னை மாநகர மக்களின் கருத்துகள் கேட்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு வரும் 19ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி வீட்டுவசதி துறைக்கும், சிஎம்டிஏவுக்கும் உத்தரவிட்டனர்.
