இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எரிவாயு விலை மிக அதிகளவில் உயருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து தி ஏசியனேஜ் ஊடகம் மார்ச் 22 அன்று வெளியிட்டுள்ள செய்தியில், "அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு விலை உயர்வு மற்றும் மின்சார விலையுயர்வு மற்றும் யூரியா உற்பத்தி போன்ற காரணங்களால் இந்திய உள்நாட்டு இயற்கை எரிவாயு விலை அடுத்த வாரத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் (எம்.பி.டி) ஒன்றுக்கு தற்போது 2.89 டாலர்களாக உள்ள இயற்கை எரிவாயு ஏப்ரல் ஒன்று முதல் 3.06 டாலர்களாக உயரும் வாய்ப்புள்ளது. தனியார் நிறுவனங்கள் அளித்துள்ள தகவல்களின் மூலம் இது தெரிகிறது" என்று தெரிவித்துள்ளது.
எரிவாயு உற்பத்தியில் உபரி உற்பத்தி காணும் அமெரிக்கா, கனடா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இயற்கை எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் தற்போது வரையில் தேவையில் பாதியளவு இறக்குமதிதான் செய்யப்பட்டு வரப்படுகிறது. உள்நாட்டு உற்பத்திக்கு ஆகும் செலவை விட இருமடங்கு செலவில் இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இயற்கை எரிவாயு உற்பத்தியில் முதல் உயர்வு இதுவாகும். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் கடந்த 2016ஆம் ஆண்டில் புதிய விலை நிர்ணய முறை இந்தியாவிலும் அமல்படுத்தப்பட்டது. இதன்படி இந்தியாவிலும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை எரிவாயு விலை மாற்றப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் இயற்கை எரிவாயு உற்பத்தியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. இந்நிறுவனம் இந்தியாவின் ஒட்டுமொத்த இயற்கை எரிவாயு உற்பத்தியில் சுமார் 70 சதவிகிதம் உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனத்தில் நாள் ஒன்றுக்கு 90 மில்லியன் கியூபிக் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
