தர்மபுரி மாவட்டம் கம்பை நல்லூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இல்லாததால், ஆரம்ப சுகாதார நிலைய வாசலிலேயே பெண் குழந்தை பெற்றதால் உறவினர்கள் நேற்று (மார்ச் 29) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், கம்பை நல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட கொங்கரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் - தீபா தம்பதியர். 23 வயதான தீபா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். தீபாவுக்கு நேற்று அதிகாலை 4 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் அருகில் உள்ள கம்பை நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தீபாவை அழைத்துச் சென்றனர்.
அப்போது, ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்பட யாரும் பணியில் இல்லை. மேலும் சுகாதார நிலைய கதவும் பூட்டப்பட்டிருந்தது. நேரம் செல்ல செல்ல தீபாவுக்குப் பிரசவ வலி அதிகமானது. இதனால் தீபாவின் உறவினர்கள் பயமும், பதற்றமும் அடைந்தனர். பின்னர் மருத்துவமனையின் வாசலில் தீபாவை அமர வைத்தனர். பிரசவ வலி மேலும் அதிகரிக்கவே தீபா வலி தாங்க முடியாமல் கதறி அழுதுள்ளார். தீபாவுக்கு மருத்துவமனையின் வாசலிலே பிரசவமானது. அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்தச் சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் அங்குக் கூடி, ஒரு வாகனத்தைப் பிடித்து அதில் தீபாவையும் குழந்தையையும் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் போதிய சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தாயும் சேயும் தற்போது நலமாக உள்ளனர்.
இதற்கிடையே மருத்துவமனையில் உதவிக்குக்கூட யாரும் இல்லாததாலும், மருத்துவமனை பூட்டியிருந்தாலும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் மருத்துவமனையின் முன் பக்கத்தில் இருந்த ஜன்னல் கண்ணாடி உடைந்தது.
மேலும் நேற்று காலையில் மருத்துவமனையை முற்றுகையிட்டு 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்தத் தகவலை அறிந்து அரூர் வட்டாட்சியர், காவல் துறையினர் ஆகியோர் அங்கு வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இல்லாதது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.
