பல்வேறு கலாசாரங்களை உள்ளடக்கிய இந்தியாவில், உணவு வகைகளுக்கும் பஞ்சமில்லை. இந்தியாவை உணவுகளின் சொர்க்கம் என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு இங்கு உணவுகளில் பல வகைகள் இருக்கின்றன. பெரு நகரங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான உணவுகள் கிடைக்கின்றன. அவை அங்கு புகழ்பெற்ற உணவுகளாகவும் மாறியுள்ளது. அதைப் பற்றிய சிறு தொகுப்பு இதோ உங்களுக்காக...
தந்தூரி சிக்கன் (டெல்லி)
வடஇந்தியாவின் புகழ்பெற்ற உணவுகள் அனைத்தும் தலைநகர் டெல்லியில் கிடைக்கும். சாலையோர உணவகங்களில் தொடங்கி தாபா, ரெஸ்ட்டாரன்ட், கபே என இடத்துக்கு ஏற்ப, பல வகைகளில் உணவுகள் இங்கு கிடைக்கின்றன. டெல்லியில் சோலா பட்டுரா, பராத்தா மற்றும் தந்தூரி சிக்கன் ஆகியவை பிரபலமாக உள்ளது. இந்தியாவிலேயே டெல்லியில்தான் தந்தூரி சிக்கன் மிகவும் சுவையாகக் கிடைக்கிறது. பராத்தா, டெல்லியின் சாலையோர உணவகங்களின் பிரபலமான உணவு. உருளைக்கிழங்கு, காலி ஃப்ளவர், முள்ளங்கி, முட்டை, கீமா, வாழை மற்றும் பருப்பு, இவற்றில் நம் விருப்பத்துக்கேற்ப, பராத்தாவில் வைத்துச் சாப்பிடலாம். சாந்தினி சவுக், பாய் மாதி தாஸ் சவுக், சீதாராம் பஜார், மதியா மஹால் ஆகிய இடங்களில் டெல்லியின் சிறந்த உணவுகள் கிடைக்கின்றன.
கீமா மற்றும் பாவ் (மும்பை)
உயர் ரக உணவகங்களிலிருந்து சிறிய ஹோட்டல்கள் வரை, நமக்கு பிடித்தமான எல்லா வகை உணவுகளும் கிடைப்பது மும்பையின் தனிச்சிறப்பு. எப்போதும் சாலையோர உணவுகளுக்குப் பிரபலமான மும்பையில் பாவ் பஜ்ஜி, பேல் பூரி, தகி பூரி, சேவ் பூரி, வட பாவ், சாண்ட்விச் ஆகிய உணவுகளை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். மட்டனுடன் வெங்காயம், பூண்டு, தக்காளி, மிளகாய் மற்றும் மசாலா சேர்த்து கீமா எனப்படும் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றுடன் பொரித்த முட்டையைச் சேர்த்தால், கீமா சிங்கிள் பிரை. இத்துடன் முட்டை துருவல் சேர்த்தால், அது கோடலா என்று அழைக்கப்படுகிறது. பிரெட் பன்னுடன் கீமா சேர்த்து உண்பது சாலையோர உணவகங்களில் பிரபலம். சார்னி ரோடு, சர்ச் கேட், பாந்த்ரா, ஜூஹூ, கோலாபா, ஷாலிமார் மற்றும் மரைன் டிரைவ் ஆகிய பகுதிகளில் இந்த உணவுகளைச் சுவைக்கலாம்.
பிரியாணி (ஹைதராபாத்)
நாவூறும் ஹைதராபாத் பிரியாணி மற்றும் கெபாப் உணவுகள், அவற்றின் சுவை மற்றும் மணத்தினால் தனித்துத் தெரிகின்றன. மட்டன் அல்லது சிக்கனை மசாலா சேர்த்து ஊறவைத்து, பாதியளவு வெந்த அரிசியுடன் சேர்த்து, ‘தம் பிரியாணி’ தயாரிக்கப்படுகிறது. ரம்ஜான் மாதத்தின்போது கிடைக்கும் உணவு வகை ஹலீம். இது மட்டன் அல்லது சிக்கன் உடன், கோதுமை மற்றும் நெய் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. பாலுடன் தேயிலை சேர்த்து தயாரிக்கப்படும் ஸ்பெஷல் பானம், இரானி சாய். நாம்பள்ளி, பஞ்ஜாரா ஹில்ஸ், சார்மினார், பேகம்பெட், ஜூபிளி ஹில்ஸ் ஆகிய இடங்களில் இதை அருந்தலாம்.
ஸ்வீட்ஸ் அண்ட் ரோல்ஸ் (கொல்கத்தா)
மற்ற நகரங்களைவிட மாறுபட்டது கொல்கத்தாவின் உணவு கலாசாரம். ரசகுல்லா, சன்டேஸ், கத்தி ரோல்ஸ், பானிபூரி, ஜால்முரி எனச் சுவையான உணவுகளின் பட்டியல் நீள்கிறது. வங்க மற்றும் சீன உணவுகளும் கொல்கத்தாவில் பிரசித்தி பெற்றவை. முட்டை அல்லது இறைச்சி மசாலாவுடன் ஸ்ஃடப் செய்து, எண்ணெயில் பொரித்து, பரிமாறப்படும் முகலாய பரோட்டா, சாலையோர உணவகங்களில் கிடைக்கிறது. சாலையோர உணவு வகைகளில் ரோல் உணவுகள் புகழ்பெற்றவை. சிக்கன், இறைச்சி, முட்டை என விதம் விதமான மசாலா கலவைகளில் உள்ளே வைத்து ரோல்களை வழங்குகின்றனர். இங்குள்ள சரத் போஸ் சாலை, நியூ மார்க்கெட், பவ் பஜார், பார்க் ஸ்ட்ரீட், எல்கின் லேன் ஆகிய இடங்களில் கொல்கத்தாவின் சிறந்த உணவுகளைச் சுவைக்கலாம்.
பர்மா ஃபுட்ஸ் (சென்னை)
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற உணவு வகைகளைச் சென்னையில் சுவைக்கலாம். இடத்துக்கு ஏற்ப உணவின் புகழும், உணவுக்கேற்ப இடத்தின் புகழும் சென்னையில் நிலைபெற்றிருக்கின்றன. சென்னை உணவு என்பது இட்லி, தோசை, மசால் வடை, பில்டர் காபி, ஆற்காடு பிரியாணி மட்டுமல்ல. இங்கு பர்மிய உணவுகள் முதல் விதம் விதமான கடல் மீன்கள் வரை சுவைக்கலாம். பர்மாவின் புகழ்பெற்ற உணவுகளான அத்தோ, மொய்ஞா போன்றவை சென்னையிலும் ஃபேமஸ். பாரிஸ் கார்னர் மற்றும் வடசென்னை பகுதிகளில் அதிக அளவில் அத்தோ உணவுகள் கிடைக்கின்றன. மயிலாப்பூர் மசால் தோசையும் பில்டர் காபியும் சைவப்பிரியர்களை ஈர்க்கிறது என்றால், கடற்கரையின் அழகுடன், கடல் உணவுகளை ருசிக்க அசைவப் பிரியர்கள் எப்போதும் ஆயத்தமாக இருக்கின்றனர். நெத்திலி மீன் பிரை, இறால் தொக்கு, வஞ்சிரம் வறுவல் ஆகியவை அவர்களின் தேர்வாக உள்ளது.





