நார்வேயில் உள்ள சிறைச்சாலைக்கும்,நைஜீரியாவில் உள்ள வீட்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஏனெனில், அந்தளவுக்கு சிறைச்சாலை பராமரிக்கப்பட்டுவருகிறது. இதனால், நார்வேயில் உள்ள ஹால்டன் சிறை உலகிலேயே மனிதநேயமிக்க சிறையாகக் கருதப்படுகிறது.
பொதுவாக, சிறைகளில் கைதிகளுக்கு வேலை கொடுப்பது ஒருபக்கம் இருந்தாலும், சிறைகளில் சித்திரவதை செய்யப்படுவதாக அவ்வப்போது புகார்கள் எழுகின்றன. இந்நிலையில், நார்வேயில் உள்ள ஹால்டன் சிறைச்சாலை மனிதநேயமிக்க சிறை என்ற பெயரைப் பெற்றுள்ளது. இங்கு, கைதிகள் சமைப்பது, கல்வி கற்பது, வேலை செய்வது மற்றும் சிறைக் காவலரோடு நேரம் செலவிடுவது என சிறை வாழ்க்கையை ஒரு சாதாரண வாழ்க்கையைப் போல வாழ்ந்துவருகின்றனர். இங்குள்ள அறைகளுக்கு கம்பிகள் இல்லை ஜன்னல்கள்தான் உள்ளன. சிலருக்கு முதன்முறையாக கல்வி கற்கும் வாய்ப்பு இங்குதான் கிடைத்துள்ளது என சிறை அதிகாரிகள் கூறுகின்றனர். இங்கிருந்து கைதிகள் செல்லும்போது சிறந்த மனிதராகச் செல்லவேண்டும் என்பதே நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகிலேயே கைதிகள் மீண்டும் குற்றங்கள் புரிவதில் குறைவான எண்ணிக்கையில் உள்ள நாடுகளில் நார்வேயும் ஒன்று.
குற்றம் செய்துவிட்டு சிறைக்கு வருபவர்களுக்கு தண்டனை வழங்காமல், மாறாக சொகுசான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பது நல்லதல்ல எனச் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற தவறுகளை கைதிகள் மீண்டும் செய்யாமல் இருக்கவே இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபர்களை சீர்திருத்த ஒரு சிறைச்சாலைக்கு நல்ல முன்மாதிரியாக நார்வே சிறைச்சாலை அமைந்துள்ளது. சிறைச்சாலையிலும் ஒரு ராஜாவாக வாழ இதைவிட வேறு எந்த இடமும் தேவையில்லை.
