ஹிமாச்சல் பிரதேசத்தில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 மாணவர்கள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர்.
ஹிமாச்சல் பிரதேச மாநிலம், காங்ரா மாவட்டம் நூர்பூர் அருகே மக்வால் மலைப்பகுதியில் நேற்று மாலை 4.30 மணி அளவில், மாணவர்கள் உட்பட 60 பேருடன் வஜிர் ராம் சிங் பதானியா பள்ளியின் பேருந்து சென்று கொண்டிருந்தது. திடீரென நிலைதடுமாறிய பேருந்து, 200 அடி செங்குத்தான பள்ளத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் பேருந்துக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க தயாராக காங்ராவிலுள்ள உள்ளூர் அரசாங்க மருத்துவமனையில் 50 மருத்துவர்கள் கொண்ட குழு இருக்க வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டது. இந்த விபத்தில் 27 மாணவர்கள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் ஹுசைன், “போலீஸ் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன் 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
42 பேர் செல்ல கூடிய பேருந்தில் அதிக மாணவர்களை ஏற்றிச் சென்றதே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
